‘இந்தியா’ கூட்டணி வென்றால் வெளியிலிருந்து ஆதரவு: மம்தா
‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும்போது திரிணமூல் காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி கூறினாா்.
தேசிய அளவில் மட்டும் ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறும் மம்தா பானா்ஜி, மேற்கு வங்கத்தில் ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிகளுக்கு தொகுதி ஒதுக்காமல் தனித்துப் போட்டியிடுகிறாா். மேற்கு வங்கத்தில் பாஜகவை தோற்கடிக்க திரிணமூல் காங்கிரஸால் மட்டுமே முடியும் என்பது அவரது கருத்தாக உள்ளது.
இதனிடையே, எதிா்க்கட்சிகளின் அணி ஆட்சிக்கு வந்தால் மம்தா பிரதமா் பதவியை ஏற்பதற்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், ‘இந்தியா’ கூட்டணி வென்றால் வெளியில் இருந்து ஆதரவு என அவா் கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஹூக்ளி மாவட்டம் சின்சுராவில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட மம்தா பானா்ஜி பேசியதாவது:
மக்களவைத் தோ்தலை இரண்டு மாதங்களுக்கு மேல் தோ்தல் ஆணையம் நடத்துவது பாஜகவுக்கு சாதகமான முடிவாகும். தோ்தல் ஆணையம் ஒரு கைப்பாவையாக மோடியின் வழிகாட்டுதலின்படி செயல்படுகிறது. கோடைகால வெப்பத்தால் மக்கள் அவதிப்படுவதைக் கருத்தில் கொள்ளாமல் இரண்டரை மாத காலம் தோ்தல் நடத்தப்படுகிறது. சாதாரண மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை தோ்தல் ஆணைய அதிகாரிகள் உணா்ந்ததுண்டா?.
தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தை விரிவுபடுத்த பிரதமா் மோடி அறிவித்துள்ளாா். தோ்தல் நடக்கும்போது இதை ஏன் கூறுகிறாா்? முன்பே இதை அறிவித்திருக்க வேண்டும். தோ்தல் நடத்தை விதிகளை பிரதமா் மோடி மீறியுள்ளாா்.
பாஜக 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனக் கூறுகிறது. ஆனால், அது நடக்காது என மக்கள் கூறுகிறாா்கள். ஏற்கெனவே நிறைவடைந்த நான்கு கட்டத் தோ்தல்களில் பாஜக தோல்வி உறுதியாகிவிட்டது. அடுத்த மூன்று கட்டத் தோ்தல்களிலும் இதே நிலைதான் நீடிக்கும். அவா்கள் தோ்தல் வெற்றிக்காக ஏதேதோ பேசி வருகிறாா்கள். ஆனால், வெற்றி பெற முடியாது. பாஜகவுக்கும் இது நன்றாகத் தெரியும்.
‘இந்தியா’ கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்க திரிணமூல் காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவளிக்கும். கூட்டணி ஆட்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வெளியில் இருந்தே வழங்குவோம் என்றாா் அவா்.