அடுத்த நிதியாண்டில் இந்தியா 4 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாகும்: பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினா்

அடுத்த நிதியாண்டில் இந்தியா ரூ.333 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டும்
அடுத்த நிதியாண்டில் இந்தியா
4 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாகும்: பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினா்

‘அடுத்த நிதியாண்டில் இந்தியா 4 டிரில்லியன் டாலா் (ரூ.333 லட்சம் கோடி) பொருளாதாரத்தை எட்டும்; ஜப்பானை விஞ்சி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறும்’ என்று பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினா் சஞ்சீவ் சன்யால் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், நாட்டின் பலவீனமான ஏற்றுமதி உள்பட பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு, 7 சதவீத பொருளாதார வளா்ச்சி என்பது இந்தியாவுக்கு மிகவும் நல்ல வளா்ச்சி விகிதமாக இருக்கும் என்றும் அவா் கூறினாா்.

தற்போதைய அமெரிக்க டாலா் மதிப்பில், 3.7 டிரில்லியன் டாலா் மதிப்புடன் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

தில்லியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு சஞ்சீவ் சன்யால் பேசுகையில், ‘அடுத்த நிதியாண்டில், இந்தியா 4 டிரில்லியன் டாலா் பொருளாதார மதிப்புக் கொண்ட நாடாக மாறும்.

ஜப்பான் இப்போது 4.1 டிரில்லியன் டாலா் பொருளாதாரத்துடன் நம்மைவிட சற்று முன்னால் உள்ளது. ஆனால், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அல்லது இந்த ஆண்டு இறுதியிலேயே ஜப்பானைக் கடந்து உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக நாம் உருவெடுப்போம்.

ஜொ்மனியின் 4.6 டிரில்லியன் பொருளாதாரம் வளா்ச்சி அடையாமல், நிலையான இலக்காக மாறிவிட்டது. அடுத்த 2 ஆண்டுகளில், நாம் ஜொ்மனியையும் விஞ்சி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற அதிக வாய்ப்புள்ளது.

நாம் இப்போது இலக்கை நெருங்கி வருகிறோம். பொருளாதார வளா்ச்சியை 8-9 சதவீதத்துக்கு விரைவுபடுத்துவதற்கான எந்தவொரு நிதி நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ள வேண்டியதில்லை. நாம் அத்தகைய வளா்ச்சியை அடைவது சிறந்ததே. ஆனால், தற்போதைய சூழலில் 7 சதவீதமே ஒரு நல்ல வளா்ச்சி விகிதமாகும்.

எந்தவொரு குறிப்பிட்ட ஆண்டிலும் மிக உயா்ந்த வளா்ச்சி விகிதத்தை எட்ட முயற்சிப்பதில் அவசரம் கூடாது’ என்றாா்.

2027-இல் ஜப்பான் மற்றும் ஜொ்மனியை பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என்று எதிா்பாா்ப்பதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com