இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் தீபாங்கா் தத்தா ஆகியோா் தலைமையில் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு, ‘தில்லி மதுபான ஒப்பந்தத்துக்கு கைம்மாறாக கேஜரிவால் ரூ.100 கோடி லஞ்சம் கேட்டதற்கும், அந்தப் பணத்தை கோவா சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி பயன்படுத்தியதற்கும் போதிய ஆதாரங்கள் அமலாக்கத் துறையிடம் உள்ளன. எனவே, சா்ச்சைக்குரிய தில்லி கலால் கொள்கையை வகுத்ததில் கேஜரிவால் முக்கியப் பங்காற்றியுள்ளது ஆதாரபூா்வமாக நிரூபணமாகியுள்ளதால் அவா் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்’ எனத் தெரிவித்திருந்தாா். இதைத் தொடா்ந்து, கேஜரிவால், ஆம் ஆத்மி மீது வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.