
காங்கிரஸ் - சமாஜ்வாதியும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடந்த தேர்தல் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது:
“காங்கிரஸும் சமாஜ்வாதியும் முதலில் ராமரை ஒரு கூடாரத்தில் வைத்தனர், பின்னர் கோயிலுக்கு பதிலாக ஒரு மருத்துவமனை அல்லது தர்மசாலா கட்டப்பட வேண்டும் என்று கூறினார்கள். ராமர் கோவில் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து புல்டோசரைப் பயன்படுத்த காங்கிரஸ் தயாராகி வருவதாகத் தெரிய வந்துள்ளது.
"காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள். குழந்தை ராமர் கோயிலில் இருந்து மீண்டும் கூடாரத்திற்கே செல்வார். அவர்கள் புல்டோசர்களை எங்கு பயன்படுத்துவது, எங்கு பயன்படுத்தக் கூடாது என்பதை உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பயிற்சி எடுக்க வேண்டும்" என்று மோடி கூறினார்.
யோகி ஆதித்யநாத் சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் குற்றவாளிகள் மற்றும் கலவரக்காரர்களின் வீடுகளை புல்டோசர் வைத்து இடித்ததால் அவரது ஆதரவாளர்களால் 'புல்டோசர் பாபா' என்றும் அழைக்கப்படுகிறார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறது. மறுபுறம், இந்தியா கூட்டணி குழப்பங்களை உருவாக்கி வருகிறது. ஒவ்வொரு கட்டமாக தேர்தல் முடிவடைய முடிவடைய, இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் பிரிந்து செல்ல தொடங்கி உள்ளனர் என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.
பகல் கனவு காண்கிறார்கள்
இந்தியா கூட்டணியின் அனைத்துத் தலைவர்களும் பிரதமர் ஆக வேண்டும் என்று பகல் கனவு காண்கிறார்கள். “பகல் கனவு காணும் போது அவர்கள் முங்கேரி லாலை விட்டுச் சென்றுள்ளனர். சமாஜ்வாதி இளவரசர் (அகிலேஷ்) மேற்கு வங்கத்தில் இருந்து ஒரு புதிய அத்தையிடம்(மம்தா) தஞ்சம் அடைந்துள்ளார். ஆனால் இந்த புதிய அத்தை, அவர்களுக்கு வெளியில் இருந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்தார். அவை ஏற்கனவே சிதைந்து வருகின்றன, அவரின் ஒரே நோக்கம் இடையூறுகளை உருவாக்குவதே்,” என்று மோடி கூறினார்.
ரேபரேலி தொகுதி மக்கள் பிரதமரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார்.
இதைக் கேட்ட “ சமாஜ்வாதி தலைவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர். இப்படிப்பட்டவர்களுக்கா உங்களது வாக்கை வீணடிப்பீர்களா? இப்படிப்பட்டவர்களிடம் வளர்ச்சியை எதிர்பார்க்க முடியுமா? ” என்று அவர் கூறினார்.
அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில், நீதிமன்றத் தீர்ப்பை மாற்ற விரும்புவதாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியிருக்கிறார். இது எப்படி சாத்தியமாகும் என்று சிலர் நினைக்கலாம். குழப்பம் அடைய வேண்டாம். சுதந்திரப் போராட்டத்தின் போது, நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று பேசும்போது, நாட்டைப் பிரிக்க முடியாது என்று மக்கள் சொன்னார்கள். ஆனால் அவர்கள் அதைச் செய்தார்கள்.
அவர்கள் எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள். அவர்களின் கடந்தகால செயல்பாடுகள் அப்படிப்பட்டவை. அவர்களைப் பொறுத்தவரை, நாடு பெரிதல்ல. அவர்களுக்கு குடும்பமும் அதிகாரமும்தான் எல்லாம்.
யோகி ஆதித்யாந்தின் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின் மூலம் இப்போது நான் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பரிசுப் பொருட்களை தேர்வு செய்வதற்கு எனது மூளையை அதிகம் பயன்படுத்த வேண்டியதில்லை. உ.பி. மாநில இணையதளத்தைப் பார்த்து பரிசுகளுக்காக 5-6 பொருட்களை எடுத்துக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.
மேலும் என்னை அசிங்கப்படுத்துவதில் போட்டி போடுவதுதான் இந்தியா கூட்டணி உறுப்பினர்களின் வேலையாக இருக்கும் என்று பிரதமர் கூறினார்.
"உங்களுக்கு ஒரு பணியாளர் தேவைப்பட்டால், நீங்கள் திறமையுள்ள ஒருவரைத் தேர்வு செய்வீர்கள். துஷ்பிரயோகம் செய்யக்கூடிய ஒருவரை நீங்கள் பணியமர்த்த மாட்டீர்கள், ”என்று அவர் கூறினார்.
மக்களின் ஆசிர்வாதத்தை பெறவே தாம் வந்ததாகவும், கடினமாக உழைத்து அன்பின் கடனை அடைப்பதாக உறுதியளித்தார்.
"நான் ஹாட்ரிக் வெற்றிக்கு தயாராக இருக்கிறேன், நாங்கள் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்காகவும் பாடுபடுவோம்."
மேலும், 500 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முடிந்தால், அதற்கு உங்கள் வாக்கு பலம்தான் காரணம். ஆனால், குடும்ப அரசியல்வாதிகளோ என் மீது அவதூறுகளை வாரி இறைக்கின்றனா்.
தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டெபாசிட் இழப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.