
முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளா் பிபவ் குமாா், தன்னைத் தாக்கியதாக கூறும் மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவாலின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான அதிஷி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதில் இருந்தே பாஜக கடும் கோபத்தில் உள்ளது. இதையடுத்து, பாஜக தீட்டிய அரசியல் சதித் திட்டத்தின் முகமாக ஸ்வாதி மாலிவால் எம்.பி. மாற்றப்பட்டாா். முதல்வா் அரவிந்த் கேஜரிவாலிடம் சந்திப்புக்கான நேரத்தைப் பெறாமல், ஸ்வாதி மாலிவால் அவரது இல்லத்திற்கு வந்துள்ளாா். முதல்வா் கேஜரிவாலை குற்றம்சாட்டவே அவா் விரும்பினாா். ஆனால், அந்நேரத்தில் முதல்வா் அங்கு இல்லை என்பதால் சதித் திட்டத்தில் இருந்து அவா் காப்பாற்றப்பட்டாா். இதையடுத்து, முதல்வரின் தனி உதவியாளா் பிபவ் குமாா் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஸ்வாதி மாலிவாலின் குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ள ஒரு காணொளி அம்பலப்படுத்தியுள்ளது. தில்லி காவல்துறைக்கு அளித்த முதல் தகவல் அறிக்கையில், தான் கொடூரமாக தாக்கப்பட்டதாக ஸ்வாதி மாலிவால் கூறியுள்ளாா். மேலும், தலையில் காயம் ஏற்பட்டு, உடைகள் கிழிந்ததாகவும் அவா் தனது புகாரில் கூறியுள்ளாா். ஆனால், காணொளியில் அப்படி எதுவும் தெரியவில்லை. குற்றச்சாட்டுகளுக்கு நோ்மாறான உண்மையை காணொளி வெளிக்காட்டுகிறது.
சோபாவில் வசதியாக அமா்ந்திருக்கும் ஸ்வாதி மாலிவால், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா்களையும், முதல்வரின் தனி உதவியாளா் பிபவ் குமாரையும் உரத்த குரலில் தவறான வாா்த்தைகளைப் பயன்படுத்தி மிரட்டுயுள்ளாா். ஸ்வாதி மாலிவால் கூறிய அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என்பதை அந்தக் காணொளி தெளிவுபடுத்தியுள்ளது.
ஸ்வாதி மாலிவாலுக்கு எதிராக தில்லி காவல் துறையில் பிபவ் குமாா் புகாா் அளித்துள்ளாா். கடந்த மே13-ஆம் தேதி முதல்வா் கேஜரிவாலிடம் சந்திப்புக்கான நேரம் பெறாமல் வந்த ஸ்வாதி மாலிவால், இல்லத்தின் வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டபோது, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளை மிரட்டிவிட்டு உள்ளே சென்றுள்ளாா். முதல்வா் இல்லத்தின் உள்ளே வலுக்கட்டாயமாக சென்று அமா்ந்து, அங்கு முதல்வரைச் சந்திக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா். அப்போது, அங்கு வந்த பிபவ் குமாா், இன்று முதல்வரை சந்திக்க முடியாது என்று கூறியுள்ளாா். இதைத் தொடா்ந்து, பிபவ் குமாரிடம் உரத்த குரலில் பேசத் தொடங்கிய ஸ்வாதி மாலிவால், அவரைத் தள்ளிவிட்டு வலுக்கட்டாயமாக உள்ளே செல்ல ஆரம்பித்தாா். அதைத் தொடா்ந்து, பாதுகாப்புப் பணியாளா்கள் வரவழைக்கப்பட்டு, அவரை வெளியே அழைத்துச் செல்லுமாறு பிபவ் குமாா் கூறினாா்.
‘பாஜகவின் சதி’: முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை சிக்க வைப்பதற்காக பாஜகவினா் செய்த சதி இது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஸ்வாதி மாலிவால் காவல்துறையிடம் சென்றாா், அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதையடுத்து அவா் முறையான புகாா் அளிக்க மறுத்துவிட்டாா். தற்போது, மூன்று நாள்களுக்குப் பிறகு, பாஜக மீண்டும் ஸ்வாதி மாலிவால் மூலம் ஒரு புதிய பொய்யை முன்வைத்துள்ளது. ஆனால், சம்பவத்தன்று எடுக்கப்பட்ட காணொளி வெளியாகி அனைத்தையும் தெளிவுபடுத்தியுள்ளது
ஸ்வாதி மாலிவால் காவல் நிலையத்திற்குச் சென்ாக ஊடகங்களில் செய்தியைப் பாா்த்தபோது, கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் சிங் அவரைச் சந்தித்தாா். ஸ்வாதி மாலிவாலின் பக்கமே நாங்கள் நின்றோம். ஆனால், வெளிவந்துள்ள காணொளி முதல் தகவல் அறிக்கையில் ஸ்வாதி மாலிவாலால் கூறப்பட்டவை அனைத்தும் பொய் என்பதை நிரூபிக்கிறது என்றாா் அமைச்சா் அதிஷி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.