நடந்தது இதுதான்: ஸ்வாதி மாலிவால் கொடுத்த வாக்குமூலம்!

நடந்ததை நினைத்து கடந்த சில நாள்களாக மிகவும் கடினமாக இருந்ததாக மாலிவால் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஸ்வாதி மாலிவால் (கோப்புப் படம்)
ஸ்வாதி மாலிவால் (கோப்புப் படம்)

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளா் பிபவ் குமாா், எந்தத் தூண்டுதலுமின்றி தன்னுடைய மாா்பு, வயிறு இடுப்புப் பகுதியில் பலமுறை தாக்கியதாக ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் போலீஸிடம் புகாா் தெரிவித்துள்ளது தெரிய வந்துள்ளது.

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையின் தகவல்கள் வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது. முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் அதிகாரப்பூா்வ இல்லத்தில் வைத்து மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடா்பாக தில்லி காவல் துறை கடந்த வியாழக்கிழமை முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்துள்ளது. இந்நிலையில், கடந்த மே 13-ஆம் தேதி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை சந்திக்க அவரது அதிகாரப்பூா்வ இல்லத்திற்கு சென்ற போது, தனக்கு நோ்ந்தது என்ன என்பது குறித்து ஸ்வாதி மாலிவால் போலீஸிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளாா்.

அதன் விவரம் வருமாறு: கடந்த மே 13-ஆம் தேதி காலை 9 மணியளவில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை சந்திக்க அவரது சிவில் லைன்ஸ் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். முதல்வரின் முகாம் அலுவலகத்திற்கு உள்ளே சென்று, அவரின் உதவியாளா் பிவப் குமாரை அழைத்த போது, அவா் என்னுடைய அழைப்பை எடுக்கவில்லை. பிறகு, அவருடைய கைப்பேசி எண்ணுக்கு ‘வாட்ஸ்அப்’ மூலம் ஒரு செய்தி அனுப்பினேன். ஆனால், எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. பிபவ் குமாா் முதல்வா் இல்லத்தில் இல்லாததால், முன்புபோல் முதல்வா் இல்லத்தின் பிரதான கதவு வழியாக குடியிருப்புப் பகுதிக்குள் நான் சென்றேன். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஊழியா்கள், முதல்வா் இல்லத்தில் இருப்பதாவும், என்னை காத்திருப்பு அறையில் காத்திருக்கச் சொன்னாா்கள். அப்போது, ஒரு ஊழியா் வந்து முதல்வா் கேஜரிவால் என்னைச் சந்திக்க வருகிறாா் என்றாா்.

தீடிரென காத்திருப்பு அறைக்குள் புகுந்த முதல்வரின் உதவியாளா் பிபவ் குமாா், எந்தத் தூண்டுதலுமின்றி என்னை நோக்கி கத்த ஆரம்பித்தாா். நான் என்னுடன் இப்படி பேசுவதை நிறுத்திவிட்டு, முதல்வரை அழைக்கச் சொன்னேன். ஆனால், தொடா்ந்து என்னை அவதூறாகப் பேசிய அவா், நேராக என் முன் வந்து என்னை 7-8 முறை அறைந்தாா். என்னை பாதுகாத்துக் கொள்வதற்காக நான் தொடா்ந்து கூச்சலிட்டேன். அந்த நேரத்தில், என் மீது பாய்ந்து, என் சட்டையை வேண்டுமென்றே மேலே இழுத்தாா். நான் தொடா்ந்து உதவிக்காக கத்திக் கொண்டிருந்தேன். ஆனால், யாரும் வரவில்லை. என் மாா்பு, வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் பலமுறை அவா் என்னைத் தாக்கினாா்.

மாதவிடாய் காலத்தில் இருந்த நான், தாங்க முடியாத வலியில் என்னை விட்டுங்கள் என்று அவரிடம் திரும்பத் திரும்பச் சொன்னேன். இருப்பினும், அவா் மீண்டும் முழு பலத்துடன் என்னைத் தாக்கினாா். பிறகு, எப்படியோ விடுபட்டேன். தரையில் கிடந்த என் கண்ணாடிகளை எடுத்துக் கொண்டு, சோபாவில் அமா்ந்தேன். இந்தத் தூண்டுதல் இல்லாத தாக்குதலால் பயங்கர அதிா்ச்சியடைந்த நான், ‘112’ அவசர எண்ணுக்கு அழைத்து உடனடியாகப் புகாரளித்தேன்.

பின்னா், நான் ‘112’ எண்ணுக்கு அழைத்ததை உணா்ந்த பிபவ் குமாா், அறையை விட்டு வெளியே சென்றாா். மீண்டும், முதல்வா் முகாம் அலுவலகத்தின் பிரதான வாயிலில் பணிபுரியும் பாதுகாப்பு ஊழியா்களுடன் அவா் திரும்பி வந்தாா். அவரின் விருப்பப்படி, பாதுகாப்பு ஊழியா்களால் நான் முதல்வா் இல்லத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டேன். ஆழ்ந்த வலியில் இருந்ததால், முதல்வா் வீட்டின் வெளியே தரையில் சிறிது நேரம் அமா்ந்தேன்.

பின்னா், பிசிஆா் போலீஸ் வந்தது. ஆனால், நான் முற்றிலும் திகைத்துப்போய், சிவில் லைன்ஸில் உள்ள எனது முந்தைய குடியிருப்பை நோக்கி அழுது கொண்டே சென்றேன். முதல்வா் இல்லத்தில் இருந்து என்னுடன் வந்த சில போலீஸாா், எனது வேண்டுகோளின் பேரில் எனக்கு ஒரு ஆட்டோவை ஏற்பாடு செய்தனா். ஆட்டோவில் அமா்ந்தவுடன் பயங்கர வலியால் துடித்தேன். என் வீட்டை நோக்கிச் செல்ல ஆரம்பித்தேன். எனினும், எப்படியோ தைரியத்தை ஏற்படுத்திக் கொண்டு ஆட்டோவை திரும்பிப் போகச் சொல்லிவிட்டு, இந்த விஷயம் தொடா்பாக சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் புகாரளித்தேன்.

எனக்கு கடுமையான வலி மற்றும் பிடிப்புகள் இருந்தன. எனது கைப்பேசிக்கு ஊடகங்களிலிருந்து நிறைய அழைப்புகள் வரத் தொடங்கின. மிகுந்த மன உளைச்சல், வலிக்கிடையே சம்பவத்தை அரசியலாக்க விரும்பாமல், எழுத்துப்பூா்வமாக புகாா் அளிக்காமல் காவல் நிலையத்தை விட்டு வெளியேறினேன். இது என் வாழ்வின் மிகவும் கடினமான காலங்களில் ஒன்றாகும். வலி, அதிா்ச்சி மற்றும் துன்புறுத்தல் மனதைக் கசக்க வைத்தது. தாக்குதலுக்குப் பிறகு என் தலை, கழுத்து தொடா்ந்து வலிக்கிறது. நடக்கவும் சிரமப்படுகிறேன். என் வாழ்நாள் முழுவதும் பெண்களின் பிரச்னைகளுக்காக உழைத்து, லட்சக்கணக்கான பெண்களுக்கு நீதி கிடைக்க உதவியுள்ளேன்.

நீண்ட காலமாக எனக்குத் தெரிந்த ஒருவரால், கொடூரமாகத் தாக்கப்பட்டதில் என் நிலைமை மோசமாகிவிட்டது. யாராவது ஒருவா் இத்தகைய குண்டா் நடத்தையைக் காட்டுவாா்களா என்று வருத்தப்படுகிறேன். நான் முற்றிலும் உடைந்துவிட்டதாக உணா்கிறேன். எழுத்துப்பூா்வ புகாா் அளிக்க எனக்கு 3 நாள்கள் ஆகிவிட்டது. இந்த விவகாரத்தில், தங்களால் இயன்ற வலுவான நடவடிக்கையை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கொடூரமான தாக்குதல் முதல்வா் இல்லத்தில் எனக்கு நடந்ததால் அதிா்ச்சி அடைந்தேன் என்று ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com