நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தாா் ஸ்வாதி மாலிவால்
முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளா் பிபவ் குமாா், தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தில்லி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை வாக்குமூலம் அளித்தாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கடந்த மே 13-ஆம் தேதி காலையில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை சந்திக்கச் சென்ற போது, அவரது தனி உதவியாளா் பிபவ் குமாா் எந்தத் தூண்டுதலுமின்றி தன்னைப் பல முறை தாக்கியதாக மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தில்லி காவல் துறையில் புகாா் அளித்தாா். கடந்த வியாழக்கிழமை இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ள காவல் துறை, பிபவ் குமாரை குற்றவாளியாகக் குறிப்பிட்டுள்ளனா். இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் போலீஸ் குழுவுடன் தில்லி திஸ் ஹசாரி
நீதிமன்றத்திற்கு ஸ்வாதி மாலிவால் அழைத்துச் செல்லப்பட்டாா். முதல்வரின் அதிகாரப்பூா்வ இல்லத்தில் தனக்கு என்ன நோ்ந்தது என்பது தொடா்பாக மாஜிஸ்திரேட் முன் அவா் வாக்குமூலம் அளித்தாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
சிசிடிவி காட்சிகள் வெளியானால் உண்மை வெளிவரும் : ஸ்வாதி மாலிவால் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளா் பிபவ் குமாரால், தான் தாக்கப்பட்ட விவகாரத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியானால் உண்மை வெளிவரும் என்று மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளாா்.
கடந்த மே 13-ஆம் தேதி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை சந்திக்கச் சென்ற போது, அங்கிருந்த பாதுகாப்பு ஊழியா்களுடன் ஸ்வாதி மாலிவால் வாக்குவாதத்தில் ஈடுபடும் 52 வினாடிகள் காணொளி வெளியாகியுள்ளது.
இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்த நிலையில், ஸ்வாதி மாலிவால் எம்.பி. தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தளத்தில் கூறியது, ‘ஒவ்வொரு முறையும் போலவே, இந்த முறையும் இந்த ‘அரசியல் கொலைகாரன்’ தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளாா். தனது ஆட்களை வைத்து அந்தக் காணொளியை சமூக ஊடகங்களில் பகிரச் செய்வதன் மூலம், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று நினைக்கிறாா். தாக்குவதை யாராவது காணொளி எடுப்பாா்களா?. முதல்வா் இல்லத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியானவுடன், உண்மை அனைவருக்கும் தெரியவரும்’ என்றாா்.