
கர்நாடகத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் மகன், பேரன் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஒருவரும் காப்பாற்றப்படக்கூடாது என்று தேவ கௌடா தெரிவித்துள்ளார்.
மகன் எச்.டி. ரேவண்ணா மற்றும் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா மீது பலாத்கார வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் எச்.டி. தேவ கௌடா தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
இந்த வழக்கில் மேலும் பலருக்கும் தொடர்பிருக்கலாம் என்றும், தொடர்பிருக்கும் அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், பிரஜ்வல் நாட்டைவிட்டே வெளியேறிவிட்டார். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்.டி. குமாரசாமி தெரிவித்துவிட்டார். அவர்களை நான் காப்பாற்ற மாட்டேன், இந்த வழக்கில் மேலும் பலருக்கும் தொடர்பிருக்கலாம், அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் தேவ கௌடா, முன்னதாக, தனது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்திருந்தார். பேரன் பிரஜ்வல் ரேவண்ணா மீது தொடரப்பட்டிருக்கும் பாலியல் பலாத்கார வழக்குகளும், சமூக வலைத்தளங்களில் அது தொடர்பாக பரவிய விடியோக்களும் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், தனது பிறந்தநாளைக் கொண்டாட தேவ கௌடா விரும்பவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.