மக்களவைத் தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

இந்த தேர்தல் 'ராமரின் பக்தர்களுக்கும்,துரோகிகளுக்குமான போர்' என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்
-
Published on
Updated on
1 min read

உத்தரபிரதேசத்தின் ஆஜம்கரில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், "நாடு முழுவதும் ஒரே ஒரு குரல்தான் ஒலிக்கிறது. மீண்டும் மோடி அரசு 400 இடங்களைத் தாண்ட போகிறது. 400 இடங்களை எப்படி வெல்ல முடியும் என்று காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சியினர் நினைக்கிறார்கள்?

ராமரை கொண்டுவந்தவர்களை, ஆட்சிக்குக் கொண்டுவருவோம் என்ற குரல் மக்களிடம் இருந்து வருகிறது. இந்த முழுத் தேர்தலும் 'ராமரின் பக்தர்களுக்கும், துரோகிகளுக்குமான போர்'.

காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கூட்டணி அராஜகமும் ஊழலும் நிறைந்த கூட்டணி. அவர்களின் ஆட்சியில் கலவரங்கள் அரங்கேறின. பாஜக ஆட்சியில் உத்தரபிரதேசத்தில் கடந்த ஏழு ஆண்டுகளில் கலவரம் ஏதும் நடந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இப்போது அனைத்து பண்டிகைகளும் அமைதியாகக் கொண்டாடப்படுகின்றன.

இன்று, பாஜக அரசால் பெண்களும் தொழிலதிபர்களும் பாதுகாப்பாக உள்ளனர். நாட்டு மக்களின் மீது கரிசனைக் கொண்டுள்ளது பாஜக அரசு. ஆனால், காங்கிரஸும் சமாஜ்வாதியும் பயங்கரவாத உணர்வுகளைக் கொண்டு விளங்குகின்றன" எனப் பேசினார்.

”பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை பாராட்டிய அவர், ஆஜம்கரில் வளர்ச்சி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இங்கே உற்பத்தியை அதிகரிக்க நாங்கள் வேலை செய்கிறோம், இதனால் மக்கள் வேலைக்காக எங்கும் செல்ல வேண்டியதில்லை.

சமாஜ்வாதி கட்சி தலைவர்களை கடுமையாக சாடிய அவர், ”இன்று வாக்குகளுக்காக இங்கு வந்துள்ளனர், தேர்தல் முடிந்த பிறகு அவர்கள் ஆஜம்கர் மக்களை கண்டுகொள்ளமாட்டார்கள். அவர்களின் ஆட்சியில் எவ்வளவோ கொள்ளையடித்து விட்டனர். அவர்களுக்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார்.

உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டது. மீதமுள்ள கட்டங்கள் மே 20, மே 25, ஜூன் 1 ஆம் தேதிகளில் நடபெறவுள்ளன.

2019 மக்களவைத் தேர்தலில், உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் 62 இடங்களை பாஜக வென்றது. மேலும் இரண்டு இடங்களில் கூட்டணி கட்சியான அப்னா தளம் (எஸ்) வெற்றி பெற்றது.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 10 தொகுதிகளிலும், அவரது கூட்டணிக் கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி வெறும் 5 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன. காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

2014 தேர்தலில், பாஜக 71 இடங்களை வென்றது, அதே நேரத்தில் காங்கிரஸ் 2 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com