கிா்கிஸ்தானில் இந்திய, பாகிஸ்தான் மாணவா்கள் குறிவைக்கப்படுவது ஏன்?

கிா்கிஸ்தானில் இந்திய, பாகிஸ்தான் மாணவா்கள் மீது உள்ளூர் மக்கள் தாக்குதல் நடத்தினர்.
கிா்கிஸ்தானில் இந்திய, பாகிஸ்தான் மாணவா்கள் குறிவைக்கப்படுவது ஏன்?

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் வெடித்துள்ள வன்முறை காரணமாக, இந்திய, பாகிஸ்தான் மாணவர்கள் வெளியே வர வேண்டாம் என்று அந்தந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகங்கள் அறிவுறுத்தியிருக்கின்றன.

கிா்கிஸ்தான் தலைநகா் பிஷ்கெக்கில் உள்ளூா்வாசிகளுக்கும் வெளிநாட்டினருக்கும் இடையே வன்முறை வெடித்த நிலையில், அந்நாட்டில் தங்கிப் படித்து வரும் மாணவர்களின் விடுதிகளிலும் வன்முறை கும்பல் பயங்கர தாக்குதலை நடத்தியிருக்கிறது. இதனால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு மாணவர்களுக்கு அங்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டில் உயா்கல்வி படிக்கும் இந்திய மாணவா்கள் வீடுகளையும், விடுதிகளையும்விட்டு வெளியேற வேண்டாம் என்று அங்குள்ள இந்திய தூதரம் அறிவுறுத்தியுள்ளது.

உள்ளூர் தொலைக்காட்சி ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்தியில், உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகளில் குறிப்பாக பாகிஸ்தான் நாட்டு மாணவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற விடுதிகளில்தான் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேச மாணவர்கள் பெரும்பாலானோர் தங்கியிருக்கிறார்கள்.

பிஷ்கெக்கில் உள்ள ஒரு உயா் கல்வி நிறுவன மாணவா் விடுதியில் கடந்த 13-ஆம் தேதி உள்ளூா் மாணவா்களுக்கும் வெளிநாட்டு மாணவா்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியாகியது. இந்த செய்தியைத் தொடா்ந்து, உள்ளூா் மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். ஒரு சில பகுதிகளில் வெளிநாட்டினா் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதைத் தொடா்ந்து, அங்குள்ள இந்திய மாணவா்கள் வெளியே வரவேண்டாம் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிஷ்கெக்கில் இந்திய மாணவா்களின் நிலை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நிலைமை தற்போது சீராகியிருப்பதாக தகவல் வந்துள்ளது. மாணவா்கள் வெளிவரவேண்டாம் எனவும், தூதரகத்துடன் தொடா்ந்து தொடா்பிலிருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என்று குறிப்பிட்டாா்.

இந்திய தூதரகம் தெரிவித்திருப்பதாவது, பிஷ்கெக்கில் தற்போது நிலைமை சுமூகமாக உள்ளது. அனைத்து இந்திய மாணவர்களும் பாதுகாப்பாக உள்ளனர். கிர்கிஸ்தான் நாட்டு அதிகாரிகள் அளித்த அறிவுறுத்தல்களை தொடர்ந்து பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று அவசர தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது.

ஏன் கிர்கிஸ்தான்?

கிா்கிஸ்தானில் தற்போது 15,000 இந்திய மாணவா்கள் உயா்கல்வி பயின்று வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், தலைநகா் பிஷ்கெக்கில் எத்தனை இந்திய மாணவா்கள் படிக்கின்றனா் என்பது உடனடியாக தெரியவில்லை.

வெளிநாட்டுக் கல்வி என்றதும் ரஷியா, உக்ரைனைத் தொடர்ந்து கிர்கிஸ்தான் தற்போது பிரபலமடைந்து வருகிறது. குறிப்பாக மருத்துவம் பயில கிர்கிஸ்தானை அதிக மாணவர்கள் தேர்வு செய்கிறார்கள். அங்கு மருத்துவக் கல்விக்கான கட்டணம் குறைவு என்பதாலும், கிளினிக்கல் பயிற்சி உள்பட 5 - 6 ஆண்டுகளில் மருத்துவம் பயில ரூ.22 லட்சம் செலவாகிறது என்பதால் பலரும் அந்நாட்டை தேர்வு செய்கிறார்கள்.

இந்திய மாணவர்களுக்கு அந்நாடு பல்வேறு சலுகைகளையும் அளிக்கிறது. மேலும், குறைந்த செலவு, இந்திய உணவு வகைகள் கிடைப்பது எளிது, நுழைவுத் தேர்வு இல்லை என்பதும் கூடுதல் சிறப்புகள்.

உலக சுகாதார நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளத்தக்க சர்வதேச அங்கீகாரச் சான்றிதழை, எம்பிபிஎஸ் முடிக்கும் மாணவர்களுக்கு கிர்கிஸ்தான் பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன. இங்கு ஆங்கிலமே பயிற்று மொழி.

எகிப்து நாட்டைச் சேர்ந்த மாணவிகளை கிர்கிஸ்தான் மாணவர்கள் துன்புறுத்தியதைத் தொடர்ந்து கிர்கிஸ்தான் மாணவர்களை எகிப்து நாட்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மே 13ஆம் தேதி தாக்கியதாகக் கூறி வெளியான விடியோவால் அந்நாட்டில் பதற்றம் வெடித்து, அதன் தொடர்ச்சியாகவே இந்திய, பாகிஸ்தான் நாட்டு மாணவர்களையும் வன்முறை கும்பல் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com