
வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடத் தேர்தல் ஆணையம் தாமதிப்பது ஏன் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத் துறைத் தலைவா் பவன் கேரா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, இன்று தனது எக்ஸ் தளப் பக்கத்தில் காணொளி வெளியிட்டுப் பேசிய பவன் கேரா, “தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு குறித்த இறுதி விவரங்களை 10 -11 நாள்கள் தாமதித்து வெளியிடுகிறது.
தேர்தல் நிகழும்போது இருக்கும் தரவுகளுக்கும், இறுதியாக வெளியிடப்படும் வாக்காளர் எண்ணிக்கைக்கும் இடையே 1.7 கோடி வாக்குகள் வரை வித்தியாசங்கள் உள்ளன. இதுபோன்று முன்னெப்போதும் நடந்ததில்லை.
நடந்து முடிந்த நான்கு கட்டத் தேர்தல் வாக்குப்பதிவுகளில், தேர்தல் ஆணையத்தின் இத்தகைய விசித்திரமான நடவடிக்கைகளின் மூலம் வாக்காளர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
மேலும், காணாமல்போன வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்தக் கேள்விக்கும் தற்போது வரை எந்த பதிலும் இல்லாதது மிகவும் வருத்தமளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “1.7 கோடி வாக்கு எண்ணிக்கை வித்தியாசங்கள் என்பது மிகப்பெரியது. இதன் மூலம் ஒரு மக்களவைத் தொகுதிக்கு 28,000 வாக்குகள் வரை அதிகமாகிறது.
பாஜக அதிக அளவிலான தொகுதிகளில் தோற்கும் என்று கணிக்கப்பட்ட மாநிலங்களில் இந்த வாக்கு எண்ணிக்கை வித்தியாசங்கள் அதிகமாக உள்ளன” என்று குற்றஞ்சாட்டினார்.
வாக்கு எண்ணிக்கை வித்தியாசங்கள் தொடர்பாக பல்வேறு எதிர்க்கட்சிகளும் கேள்வியெழுப்பி வருகின்றன.
எழு கட்டங்களாக நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவுகள் வருகிற ஜூன் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.