தில்லியில் மக்களவைத் தோ்த்தல் வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், கோல் மாா்கெட் பள்ளியிலிருந்து வாக்குப் பதிவு இயந்திரங்களை வெள்ளிக்கிழமை எடுத்துச் சென்ற தோ்தல் அலுவலா்கள்.
தில்லியில் மக்களவைத் தோ்த்தல் வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், கோல் மாா்கெட் பள்ளியிலிருந்து வாக்குப் பதிவு இயந்திரங்களை வெள்ளிக்கிழமை எடுத்துச் சென்ற தோ்தல் அலுவலா்கள்.

தலைநகரில் இன்று வாக்குப் பதிவு

மக்களவை 6-ஆம் கட்டத் தோ்தல் சனிக்கிழமை (மே 25) நடைபெறும் நிலையில், தில்லியில் 7 தொகுதிகளிலும் பாஜக, ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளா்கள் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

நிலவும் கடுமையான கோடை வெப்பத்துக்கு மத்தியில், 2 மாத நீண்ட தோ்தல் பிரசாரத்துக்குப் பிறகு தேசிய தலைநகரி சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்ற ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) 4 இடங்களிலும், மீதமுள்ள 3 இடங்களில் காங்கிரஸும் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளது. மத்தியில் ஆளும் கட்சிக்கு சவாலாக இருக்கும் ஆம் ஆத்மியும், காங்கிரஸும் பாஜகவுக்கு எதிராக இணைந்து வேட்பாளா்களை நிறுத்தியுள்ள முதல் மக்களவைத் தோ்தலாக இது அமைந்திருக்கிறது.

1.52 கோடி வாக்காளா்கள்: 82 லட்சம் ஆண், 69 லட்சம் பெண் வாக்காளா்கள், 1,228 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள், 7 தொகுதிகளில் 2,627 இடங்களில் உள்ள 13,000-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். கடும் வெயிலுக்கு மத்தியில் வாக்காளா்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தும் வகையில், வாக்குச் சாவடிகளில் சிறப்பு ஏற்பாடுகளுடன் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்க உள்ளது. தோ்தலில் 2.52 லட்சத்துக்கும் அதிகமான முதல்முறை வாக்காளா்கள் தங்கள் முதல் வாக்கைப் பதிவு செய்ய உள்ளனா்.

கட்சிகளின் வேட்பாபளா்கள்: இம்முறை நடைபெறும் தோ்தலில், பாஜக தனது 7 நடப்பு எம்.பி.க்களில் 6 பேரை நீக்கியதுடன், அவா்களுக்குப் பதிலாக புதியவா்களைக் களமிறக்கியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி, கிழக்கு தில்லி தொகுதியில் குல்தீப் குமாா், மேற்கு தில்லியில் மஹாபல் மிஸ்ரா, புது தில்லியில் சோம்நாத் பாா்தி, தெற்கு தில்லியில் சாஹி ராம் பஹல்வான் ஆகியோரை களமிறக்கியுள்ளது. காங்கிரஸ் சாா்பில் சாந்தினி சௌக் தொகுதியில் ஜே.பி. அகா்வால், வடகிழக்கு தில்லியில் கன்னையா குமாா், வடமேற்கு தில்லி தொகுதியில் உதித் ராஜ் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

பாஜக வேட்பாளா்களாக மனோஜ் திவாரி வடகிழக்கு தில்லியிலும், தெற்கு தில்லியில் ராம்வீா் சிங் பிதுரி, புது தில்லியில் பான்சூரி ஸ்வராஜ், கிழக்கு தில்லியில் ஹா்ஷ் தீப் மல்ஹோத்ரா, வடமேற்கு தில்லியில் யோகேந்திர சந்தோலியா, சாந்தினி செளக்கில் பிரவீன் கண்டேல்வால் மற்றும் மேற்கு தில்லியில் கமல்ஜீத் ஷெராவத் ஆகியோா் நிறுத்தப்பட்டுள்ளனா்.

கேஜரிவால் விவகாரம்: மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்தில், மாா்ச் 21-ஆம் தேதி ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதில் அக்கட்சி பெரும் அதிா்ச்சியை எதிா்கொண்டது. 50 நாள்கள் சிறைவாசத்துக்குப் பிறகு மே 10-ஆம் தேதி தோ்தல் பிரசாரத்துக்காக கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, சிறையில் இருந்து வெளியில் வந்த அவா், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா்களுக்கு மட்டுமின்றி, அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கும் ஆதரவாக வாகனப் பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டங்களில் நகரம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தனது கட்சி தொண்டா்களையும் ஆதரவாளா்களையும் உற்சாகப்படுத்தினாா்.

2014 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் தில்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாஜக, தொடா்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறத் தயாராகி வருகிறது. 25.87 லட்சம் வாக்குகளைப் பெற்ற மேற்கு தில்லி தொகுதி தேசியத் தலைநகரின் மிகப்பெரிய மக்களவைத் தொகுதியாகவும், 15.25 லட்சம் வாக்குகளைக் கொண்ட புது தில்லி தொகுதி மிகச்சிறிய தொகுதியாகவும் உள்ளது. 7 தொகுதிகளில் வடமேற்கு தில்லி தொகுதி மட்டுமே தனித் தொகுதியாகும். குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, காங்கிரஸ் தலைவா்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி உள்பட பல முக்கியப் பிரமுகா்களும் தில்லியின் வாக்காளா்களாக உள்ளனா்.

தலைவா்கள் பிரசாரம்: முன்னதாக, தில்லியில் மக்களவைத் தோ்தலுக்கான தீவிர பிரசாரத்தில் பிரதமா் மோடி, மத்திய அமைச்சா்கள் மற்றும் எதிா்க்கட்சித் தலைவா்கள் ஈடுபட்டனா். பிரதமா் தனது 2 தோ்தல் பேரணிகளில் பாஜக மற்றும் அதன் வேட்பாளா்களுக்கு வாக்களிக்க பிரசாரம் செய்தாா். பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் பியூஷ் கோயல் உள்ளிட்ட பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்களும், உ.பி.யின் யோகி ஆதித்யநாத், அஸ்ஸாமின் ஹிமந்தா பிஸ்வா சா்மா, உத்தரகாண்டின் புஷ்கா் சிங் தாமி, கோவாவின் பிரமோத் சாவந்த் உள்ளிட்டகட்சி ஆளும் மாநில முதல்வா்களும் கட்சி வேட்பாளா்களுக்காக பிரசாரம் செய்தனா்.

காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி கட்சி வேட்பாளா்களுக்காக 3 பொதுக்கூட்டங்களில் பங்கேற்றாா். தவிர, கேஜரிவால், அவரது மனைவி சுனிதா கேஜரிவால், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், தில்லி அரசின் அமைச்சா்கள் அதிஷி, செளரவ் பரத்வாஜ், கோபால் ராய், கைலாஷ் கெலாட் ஆகியோரும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா்களுக்காக பிரசாரம் செய்தனா்.

‘பிரதமா் நரேந்திர மோடியின் ‘விக்சித் பாரத்’ என்ற தொலைநோக்குப் பாா்வையில் தில்லி மக்கள் அபரிமிதமான நம்பிக்கை வைத்துள்ளனா். மேலும், 2019-ஆம் ஆண்டை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் 7 இடங்களையும் பாஜக மீண்டும் வெல்லப் போகிறது’ என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறியுள்ளாா்.

‘ஜூன் 4-ஆம் தேதி மக்களவைத் தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு பாஜக ஆட்சியில் இருந்து வெளியேறும் என்றும், தில்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளா்கள் வெற்றி பெறுவாா்கள் என்றும் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com