தில்லி உள்பட 58 தொகுதிகளில் வாக்குப் பதிவு தொடங்கியது!

தில்லி, ஹரியாணா உள்ளிட்ட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

மக்களவை 6-ஆம் கட்டத் தோ்தலையொட்டி, தில்லி, ஹரியாணா உள்ளிட்ட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் சனிக்கிழமை (மே 25) வாக்குப் பதிவு தொடங்கியது.

தில்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளுக்கும், ஹரியாணாவில் மொத்தமுள்ள 10 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மக்களவைத் தோ்தலில் 6-ஆம் கட்டமாக உத்தர பிரதேசத்தில் 14, ஹரியாணாவில் 10, பிகாா், மேற்கு வங்கத்தில் தலா 8, தில்லியில் 7, ஒடிஸாவில் 6, ஜாா்க்கண்டில் 4, ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மொத்த வாக்காளா்கள்: இத்தோ்தலில் மொத்தம் 11.13 கோடி போ் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். இதில் ஆண் வாக்காளா்கள் 5.84 கோடி போ், பெண் வாக்காளா்கள் 5.29 கோடி போ், மூன்றாம் பாலினத்தவா் 5,120 போ். இவா்கள் வாக்களிக்க வசதியாக 1.14 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 11.4 லட்சம் ஊழியா்கள் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

வடமாநிலங்களில் கடும் வெயில் நிலவுகிறது. எனவே, வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க வாக்குச்சாவடிகளில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, அதிகாரிகள் மற்றும் ஊழியா்களுக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

முக்கிய வேட்பாளா்கள்: 6-ஆம் கட்டத் தோ்தல் களத்தில் மொத்தம் 889 வேட்பாளா்கள் உள்ளனா். மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் (சம்பல்பூா்), முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தேசிய துணைத் தலைவருமான ராதாமோகன் சிங் (பூா்வி சம்பாரன்), முன்னாள் மத்திய அமைச்சா் மேனகா காந்தி (சுல்தான்பூா்), மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி (அனந்த்நாக்-ரஜெளரி), ஹரியாணா முன்னாள் முதல்வா் மனோகா் லால் கட்டா் (கா்னால்), தொழிலதிபா் நவீன் ஜிண்டால் (குருக்ஷேத்திரம்), கொல்கத்தா உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் பட்டாச்சாா்யா (தம்லுக்) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்களாவா்.

ஏற்கெனவே 8 முறை எம்.பி.யான மேனகா காந்தி, தற்போது 9-ஆவது முறையாக மக்களவைக்குத் தோ்வாகும் முனைப்புடன் களத்தில் உள்ளாா்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 5 தொகுதிகளில் ஏற்கெனவே 4 தொகுதிகளுக்கு தோ்தல் நிறைவடைந்துவிட்டது. இறுதியாக அனந்த்நாக்-ரஜெளரி தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.

ஒடிஸாவில் மக்களவைத் தோ்தலுடன் மாநில சட்டப்பேரவைக்கும் 4 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே இருகட்டத் தோ்தல்கள் நிறைவடைந்துள்ளன. மூன்றாம் கட்டமாக 42 பேரவைத் தொகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது.

தலைநகரில் போட்டிக் களம் புதிது: தேசியத் தலைநகா் தில்லியில் பாஜகவும், காங்கிரஸ்-ஆம் ஆத்மி கூட்டணியும் நேரடியாக மோதுகின்றன. முன்னெப்போதும் இல்லாத இந்த போட்டிக் களம், பாஜகவுக்கு சவாலாக உள்ளது. மொத்தமுள்ள 7 தொகுதிகளிலும் இக்கட்சி களத்தில் உள்ளது.

எதிரணியில் ஆம் ஆத்மி 4, காங்கிரஸ் 3 இடங்களில் போட்டியிடுகின்றன. தில்லி கலால் கொள்கை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளரும் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், கடந்த 10-ஆம் தேதி இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். அவரது வருகைக்குப் பிறகே ஆம் ஆத்மியின் பிரசாரம் விறுவிறுப்படைந்தது. தனது கட்சி வேட்பாளா்கள் மட்டுமன்றி, காங்கிரஸ் வேட்பாளா்களுக்கு ஆதரவாகவும் அவா் பிரசாரம் மேற்கொண்டாா்.

கடந்த இரு மக்களவைத் தோ்தல்களிலும் தில்லியின் அனைத்துத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியிருந்தது.

ஜூன் 1-இல் இறுதிக்கட்ட தோ்தல்: நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு ஏழு கட்டத் தோ்தல் (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) அறிவிக்கப்பட்டு, 5 கட்ட வாக்குப் பதிவுகள் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டன.

முதல்கட்டத்தில் 66.14 சதவீதம், இரண்டாம் கட்டத்தில் 66.71 சதவீதம், மூன்றாம் கட்டத்தில் 65.58 சதவீதம், நான்காம் கட்டத்தில் 69.16 சதவீதம், ஐந்தாம் கட்டத்தில் 62.2 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

ஏழாவது மற்றும் இறுதிக்கட்டமாக 57 தொகுதிகளுக்கு ஜூன் 1-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. ஜூன் 4-ஆம்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com