
‘பிரதமர் மோடி தன்னம்பிக்கையை இழந்து விட்டார்; மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என்பதை உணர்ந்து அவர் தனது பேச்சுகளில் தடுமாறுகிறார்' என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
இது தொடர்பாக உத்தர பிரதேச மாநிலம், சலேம்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ராம்சங்கர் வித்யார்த்தியை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:
ஜூன் 4-ஆம் தேதி மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். அதன் பிறகு மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும். அப்போது மத்திய அமைச்சரவை மட்டுமின்றி ஊடகங்களும் மாறும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அக்னிவீர் திட்டம் ரத்து செய்யப்படும்.
பிரதமர் மோடி தன்னம்பிக்கையை இழந்து விட்டார். மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என்பதை உணர்ந்து விட்டதால் அவர் தனது பேச்சுகளில் தடுமாறுகிறார். பிரதமர் பதவி தன்னிடம் இருந்து நழுவுவதை மோடி அறிந்துள்ளார்.
400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று முழங்குவோர் (பாஜகவினர்) தேர்தலில் தோற்கப் போகின்றனர். பாஜகவுக்கு எதிரான மக்களின் கோபம் உச்சத்தில் உள்ளது. மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு 140 இடங்களாவது கிடைக்காதா என்று பாஜகவினரை நாட்டின் 140 கோடி மக்கள் ஏங்க வைத்து விடுவார்கள்.
மோடி அரசு தொழிலதிபர்கள் வாங்கிய ரூ. 25 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களை ரத்து செய்துவிட்டது. இந்தியா கூட்டணி அரசு மத்தியில் அமைந்ததும் விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படுவதுடன், விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையையும் வழங்கும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அகிலேஷ் யாதவிடம் ‘இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ஷரியத் (முஸ்லிம்) சட்டத்தை அமல்படுத்துவர்' என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நேரடியாக பதிலளிக்காமல் அகிலேஷ் கூறுகையில் ‘யோகியின் யோகாசனத்தை நீங்கள் பார்த்துள்ளீர்களா? தேர்தலுக்குப் பிறகு அவர் முற்றிலுமாக நடுங்கி விடுவார்.
’இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால் அயோத்தி ராமர் கோயிலுக்கு பூட்டு போட்டுவிடுவார்கள்' என்று பாஜக பேசுவது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்பதாகும்.
இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் சாசனத்தை மாற்ற பாஜக விரும்புகிறது' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.