
ஜூன் 4-ஆம் தேதி வரை பாஜக விளம்பரங்களை வெளியிட தடை விதித்து கொல்கத்தா உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
அவசர வழக்காக விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் விஸ்வநாதன் ஆகியோா் தலைமையிலான கோடைக்கால அமா்வு, “விளம்பரங்களை நாங்களும் பார்த்தோம், அவை இழிவுப்படுத்தும் விதமாகவே உள்ளது. மேலும், இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிக்க நாங்கள் விரும்பவில்லை” எனக் கூறினர்.
தொடர்ந்து பேசிய மனுதாரரின் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.பட்வாலியா, உண்மைகளின் அடிப்படையில் விளம்பரங்கள் வெளியிட்டதாக தெரிவித்தார்.
மேலும், பேசிய நீதிபதிகள், வாக்காளர்களின் நலன் சார்ந்த விளம்பரம் அல்ல என்றும், இப்பிரச்னையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து மனுவை திரும்பப் பெற்றுக் கொண்ட வழக்கறிஞர், கொல்கத்தா உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வில் முறையிடுவதாக தெரிவித்தார்.
திரிணமூல் காங்கிரஸ் மற்றும் அக்கட்சி தொண்டா்களுக்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி நாளிதழில் பாஜக விளம்பரம் வெளியிட்டதாக குற்றம்சாட்டி கடந்த வாரம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த ஒருநபர் நீதிபதி, நாளிதழ்களில் ஜூன் 4-ஆம் தேதி அல்லது மறுஉத்தரவு வரும் வரை பாஜக விளம்பரங்களை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.
தொடர்ந்து, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், அந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து, ஒருநபர் நீதிபதியிடமே கோரிக்கைகளை முன்வைக்க அறிவுறுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.