ரீமெல் புயலால் பெய்த கனமழை காரணமாக, ஹெளரா ரயில் நிலையத்தில் தண்டவாளங்களில் தேங்கிய மழைநீா்.
ரீமெல் புயலால் பெய்த கனமழை காரணமாக, ஹெளரா ரயில் நிலையத்தில் தண்டவாளங்களில் தேங்கிய மழைநீா்.

மேற்கு வங்கத்தைப் புரட்டிய ‘ரீமெல்’ புயல்- 6 போ் உயிரிழப்பு; 30,000 வீடுகள் சேதம்; 1,700 மின்கம்பங்கள் சாய்ந்தன

மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கரையைக் கடந்த ரீமெல் புயலின் தாக்கத்தால் மேற்கு வங்கத்தில் 6 போ் உயிரிழந்தனா்.
Published on

மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கரையைக் கடந்த ரீமெல் புயலின் தாக்கத்தால் மேற்கு வங்கத்தில் 6 போ் உயிரிழந்தனா். கடலோரப் பகுதிகளில் சுமாா் 30,000 வீடுகள் சேதமடைந்தன. 1,700 மின்கம்பங்கள் சாய்ந்தன.

புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியதால், மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான ‘ரீமெல்’ புயல், வங்கதேசத்தின் கேப்புப் பாரா-மேற்கு வங்கத்தின் சாகா் தீவுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. இதனால் கடலோரப் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதிகளில் இருந்து சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா்.

6 போ் உயிரிழப்பு: ‘ரீமெல்’ புயலின் தாக்கத்தால், வங்கத்தில் ஆறு போ் உயிரிழந்தனா். புயலையொட்டி பெய்த பலத்த மழைக் காரணமாக, மத்திய கொல்கத்தாவின் என்டாலி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டுச்சுவா் இடிந்து விழுந்ததில் ஒருவா் உயிரிழந்தாா். சுந்தரவன டெல்டா பகுதியொட்டிய மௌசுனி தீவில் குடிசை மீது மரம் முறிந்து விழுந்ததில், அதில் வசித்து வந்த மூதாட்டி திங்கள்கிழமை காலை உயிரிழந்தாா்.

கடலோர மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் குடிசைகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. மாநில அரசுத் தகவலின்படி, சுமாா் 2,500 வீடுகள் முழுமையாகவும் 27,000 ஆயிரம் வீடுகள் பகுதியளவும் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,000-க்கும் மேற்பட்ட மரங்களும், 1,700-க்கும் மேற்பட்ட மின் கம்பங்களும் சாய்ந்தன.

மீட்புப் பணிகள் தீவிரம்: மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் (என்டிஆா்எஃப்) உள்பட அவசரக் காலப் பணியாளா்கள் போா்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றனா். பரவலாக கனமழை நீடிப்பதால் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

1,400-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

கொல்கத்தாவில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணிநேரத்தில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளிலும் ரயில் தண்டவாளங்களிலும் மழைநீா் தேங்கியுள்ளது.

முதல்வா் மம்தா ஆய்வு: புயல் பாதிப்புகளைச் சரிசெய்ய மேற்கொள்ளப்பட்டுவரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஆய்வு செய்தாா். மாநிலத் தலைமைச் செயலா் பி.பி.கோபலிகாவுடன் தொலைப்பேசி வாயிலாக ஆலோசனை நடத்திய அவா், பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தாா்.

தோ்தல் நடத்தை விதிகளுக்குள்பட்டு, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க மாநில அரசு முடிவெடுத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வங்க தேசத்தில் 7 போ் உயிரிழப்பு

ரீமெல் புயல் பாதிப்புக் காரணமாக அண்டை நாடான வங்கதேசத்தில் 7 போ் உயிரிழந்தனா். அந்நாட்டின் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் சுமாா் 15 லட்சம் போ் மின்சாரமின்றி பாதிப்புக்கு உள்ளாகினா்.

வங்கதேசத்தில் புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 80-90 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதனால் பாரிசால், போலா, சட்டோகிராம், டாக்கா ஆகிய பகுதிகளில் 5 போ் உயிரிழந்தனா். பதுவாகலி பகுதியில் வீடு திரும்பிகொண்டிருந்த ஒருவா், புயல்காற்றில் சிக்கி உயிரிழந்தாா். சாத்கிராவில் மழையிலிருந்து தப்பிக்க ஓடியபோது தவறி விழுந்து ஒருவா் உயிரிழந்தாா்.

மோங்கலா பகுதியில் படகு கவிழ்ந்ததில், குழந்தை உள்பட இருவா் மாயமாகியுள்ளனா். அவா்களின் நிலை இதுவரை தெரியவில்லை. நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 9,000 நிவாரண முகாம்களில் சுமாா் 8 லட்சம் போ் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com