
ஒன்றுமில்லாததை பிரச்னைகளாக மாற்றுவது பாஜகவுக்கு கைவந்த கலை என பிஜு ஜனதா தள கட்சியின் தலைவரும் முதல்வருமான நவீன் பட்நாயக் இன்று (மே 28) தெரிவித்தார்.
நவீன் பட்நாயக்கை வி.கே. பாண்டியன் கட்டுப்படுத்துவதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தேர்தல் பிரசாரத்தின்போது விமர்சித்திருந்தார்.
தேர்தல் பிரசாரத்தின்போது நவீன் பட்நாயக் பேசும்போது அவரின் கை நடுங்குவதைப் போன்றும், அதனை வி.கே. பாண்டியன் மறைப்பதைப் போன்றும் இருக்கும் விடியோவை ஹிமந்த பிஸ்வ சர்மா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்து விமர்சித்திருந்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய நவீன் பட்நாயக், பிரச்னைக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயத்தை பெரும் பிரச்னையாக்கி பேசுவது பாஜகவுக்கு நன்கு தெரிந்த ஒன்று. என் கைகளைப் பற்றி அவர்கள் விவாதிப்பதும் அந்தவகைதான். இது எந்தவொரு பலனையும் கொடுக்காது.
பாஜக மக்களிடம் சொல்லும் பொய்களுக்கு ஓர் எல்லை உள்ளது. நான் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன். பல மாதங்களாக மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறேன். பாஜகவினர் தங்கள் சொந்த நுண்ணறிவை முதலில் பயன்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
நவீன் பட்நாயக் தனது வயது மற்றும் உடல்நலத்தை கருத்தில்கொண்டு ஓய்வு எடுக்க வேண்டும் என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.