
தேரா சச்சா சௌதா அமைப்பின் முன்னாள் மேலாளர் ரஞ்சித் சிங் கொலை வழக்கில் இருந்து அந்த அமைப்பில் தலைவர் குர்மீத் ராம் ரஹீமை பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
கடந்த 2002-ஆம் ஆண்டு ரஞ்சித் சிங் கொலை செய்யப்பட்ட வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் மற்றும் 4 பேரை குற்றவாளி எனத் தீர்ப்பளித்த சிபிஐ நீதிமன்றம் 2021-இல் ஆயுள் தண்டனை வழங்கியது.
தண்டனை பெற்ற 5 பேரில் ஒருவர் தீர்ப்பு வருவதற்கு முன்னதாகவே உயிரிழந்துவிட்டார்.
ஹரியாணா மாநிலம், சிர்சாவில் உள்ள தேரா சச்சா சௌதா ஆசிரமத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக அரசின் முக்கியத் துறைகளுக்குக் கடிதம் வந்தது. அந்தக் கடிதங்களை அனுப்புவதில் உடந்தையாக இருந்ததாக முன்னாள் மேலாளா் ரஞ்சித் சிங் மீது குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு சந்தேகம் எழுந்தது. இந்தச் சூழலில் கடந்த 2002-இல் ரஞ்சித் சிங் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தன்னைப் பற்றிய விவரங்களை ரஞ்சித் சிங் கசியவிட்டதால், அவரைக் கொல்வதற்கு குர்மீத் ராம் ரஹீம் சிங் சதித் திட்டம் தீட்டினார் என்று சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குர்மீத் ராம் ரஹீம் மற்றும் 4 பேர் குற்றவாளி என்று அளித்த தீர்ப்பை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த நிலையில், குர்மீத் ராம் ரஹீம், கிருஷ்ணன் லால், ஜஸ்பீர் சிங், அவதார் சிங், சப்கில் ஆகிய நான்கு பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே, பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குர்மீத் ராம் ரஹீம், கடந்த 2017 முதல் ரோஹ்தாக் சுனாரியா சிறையில் 20 ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து, பத்திரிகையாளர் சத்ரபதி கொலை வழக்கிலும் குர்மீத் ராம் ரஹீமுக்கு ஆயுள் தண்டனை அனுபவிக்கவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.