
ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் தலைவர் ஷர்ஜீல் இமாமுக்கு, தேச துரோக வழக்கில் ஜாமீன் வழங்கி தில்லி உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ஜாமீன் கோரிய மனுவை விசாரணை நீதிமன்றம் நிராகரித்த நிலையில், தில்லி உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ் குமார், மனோஜ் ஜெயின் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
தேச துரோக வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படுபவர்களுக்கான தண்டனை 7 ஆண்டுகள் என்ற நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால் ஷர்ஜீல் தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது.
ஷர்ஜீல் இமாம் தரப்பின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அவருக்கு சட்டப்பூர்வ ஜாமீன் வழங்குவதாக தெரிவித்தனர்.
இருப்பினும், தில்லி கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கில் ஷர்ஜீல் இமாம் தொடர்ந்து சிறையில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் ஜாமீன் மனுவை விசாரித்த தில்லி மாவட்ட நீதிமன்றம், ”குற்றம்சாட்டப்பட்டவர் ஆயுதம் ஏந்தி பிறரை கொல்லுங்கள் எனக் கூறவில்லை என்றாலும், அவரது பேச்சு தில்லி கலவரத்துக்கு முக்கிய காரணமாக இருந்தது.” எனத் தெரிவித்து ஜாமீன் மனுவை ரத்து செய்திருந்தனர்.
2019 மற்றும் 2020-இல் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் ஆத்திரமூட்டும் வகையில் பேசியதாகக் குற்றம்சாட்டப்பட்டு ஜேஎன்யு மாணவர் ஷர்ஜீல் இமாம் ஜனவரி, 2020-இல் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.