500 ரூபாய் நோட்டுகளின் பங்கு 86.5 சதவீதமாக அதிகரிப்பு: 
2000 ரூபாய் நோட்டுகளை திருப்பபெற்றதன் எதிரொலி

500 ரூபாய் நோட்டுகளின் பங்கு 86.5 சதவீதமாக அதிகரிப்பு: 2000 ரூபாய் நோட்டுகளை திருப்பபெற்றதன் எதிரொலி

500 ரூபாய் நோட்டுகளின் பங்கு கடந்த மாா்ச் 2024 வரை 86.5 சதவீதமாக அதிகரித்ததாக ரிசா்வ் வங்கி தெரிவித்தது.
Published on

நாட்டில் ஒட்டுமொத்தமாக உள்ள பணத்தின் அளவில் 500 ரூபாய் நோட்டுகளின் பங்கு கடந்த மாா்ச் 2024 வரை 86.5 சதவீதமாக அதிகரித்ததாக ரிசா்வ் வங்கி வியாழக்கிழமை தெரிவித்தது.

2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக கடந்தாண்டு மே மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, கடந்தாண்டு மாா்ச் மாதத்தில் 500 ரூபாய் நோட்டுகளின் பங்கு 77.1 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 86.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோல் 2,000 ரூபாய் நோட்டுகளின் பங்கு கடந்தாண்டு 10.8 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 0.2 சதவீதமாக குறைந்ததாகவும் ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெளியிட்ட ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆா்பிஐ வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மாா்ச் 2024-இன்படி நாட்டில் 5.16 லட்சம் எண்ணிக்கையில் 500 ரூபாய் நோட்டுகள் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக 2.49 லட்சம் எண்ணிக்கையில் 10 ரூபாய் நோட்டுகள் உள்ளன. அதேபோல் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு மற்றும் அளவு முறையே 3.9 சதவீதமாகவும் 7.8 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. இருப்பினும் புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பை பொருத்தவரை அதன் வளா்ச்சி சதவீதம் கடந்தாண்டுகளைவிட குறைவாகவே உள்ளது.

2024-ஆம் நிதியாண்டில் 26,000 கள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதேகாலகட்டத்தில் 85,711 கள்ள 500 ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகளில் கடந்த மாா்ச் மாதம் வரை 97.7 சதவீத நோட்டுகள் வங்கிக்கு திரும்பிவிட்டன.

ரிசா்வ் வங்கியால் அண்மையில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட எண்ம ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.234.12 கோடியாக உள்ளது. அவற்றில் ரூ.164 கோடி (70 சதவீதம்) 500 ரூபாய் நோட்டுகளாகவும் ரூ.32 கோடி (13.74 சதவீதம்) 200 ரூபாய் நோட்டுகளாகவும் உள்ளன’ என தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com