
வி.கே. பாண்டியன் எனது அரசியல் வாரிசு கிடையாது என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.
மேலும், பிஜு ஜனதா தளத்தின் எதிர்க்காலத் தலைவரை ஒடிசா மக்களே முடிவு செய்வார்கள் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
வி.கே. பாண்டியன்தான், நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமரிசித்து வந்த நிலையில், இந்த விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.
ஒடிசாவில், பாஜகவின் தேர்தல் பிரசாரத்தில், தமிழகத்தைச் சேர்ந்த அரசுப் பணி அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய வி.கே. பாண்டியனைப் பற்றித்தான் அதிக விமர்சனங்கள் எழுப்பப்பட்டிருக்கும். இந்த நிலையில்தான் நவீன் பட்நாயக் இந்த விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு நவீன் பட்நாயக் அளித்த நேர்காணலில், உங்களுடன் நெருங்கிய நபராக இருக்கும் வி.கே. பாண்டியன், ஒரு கேட் கீப்பர் போல செயல்படுவதாகவும், நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளையும் அவரே எடுப்பதாகவும் கூறப்படுகிறதே என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த நவீன் பட்நாயக், இது மிகவும் மோசமான விஷயம், இதற்கு முன்பே நான் பல முறை பதிலளித்துள்ளேன், இது பல காலமாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, இதற்கு இப்போது எந்த அர்த்தமும் கிடையாது என்றார்.
மேலும், பாண்டியன்தான் உங்கள் அரசியல் வாரிசா என்ற கேள்விக்கு, எனது அரசியல் வாரிசு என்று பாண்டியனை கூறுவது மிகைப்படுத்தப்பட்டது மற்றும் துரதிருஷ்டவசமானது. என்னால், இந்த மிகைப்படுத்துதலை புரிந்துகொள்ளமுடியவில்லை.
மேலும், ஒடிசாவிலும், தேசிய அளவிலும், பாஜக தனது செல்வாக்கை இழந்து வருகிறது. அதுனால்தான், எதிர்க்கட்சிகள் குறித்து இதுபோன்ற கருத்துகளை பரப்பி வருகிறது. நாடு முழுவதும் அவர்கள் செல்வாக்கை இழந்து வருவதால் பாஜகவினர் விரக்தியில் இருக்கிறார்கள் என்றார்.
அரசியல் வாரிசு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஒரு அரசியல் கட்சியைப் பொறுத்தவரை, மக்கள்தான் அதனை முடிவு செய்வார்கள். நான் இது குறித்து பல முறை சொல்லிவிட்டேன், பிஜு ஜனதா தளத்தின் அடுத்த தலைவரை மாநில மக்களே தேர்வு செய்வார்கள். அதுதான் இயற்கையான வழியாக இருக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
நான் கடந்த 27 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன், எனக்கு இக்கட்சியின் தலைமைப் பதவி 27 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது. அதனை நான் தற்போது வரை சிறப்பாக நடத்தி வருகிறேன், மேலும் அதையே தொடர்வேன் என்று தெரிவித்துள்ளார்.
நவீன் பட்நாயக்கின் உடல்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டிப் பேசியிருந்த நிலையில், ஒடிசா முதல்வரின் இந்த நேர்காணல் அதற்கு பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.