பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட 100 டன் தங்கம்! ரிசர்வ் வங்கி நடவடிக்கை

பிரிட்டனிலிருந்து ரிசர்வ் வங்கி 100 டன் தங்கத்தை இந்தியாவுக்குக் கொண்டுவந்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

பிரிட்டனிலிருந்து 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக, 100 டன் தங்கத்தை ரிசர்வ் வங்கி தனது பெட்டகத்துக்கு மாற்றியிருக்கிறது.

ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான தங்கத்தில் பாதியளவுக்கு பாதுகாப்புக் காரணங்களுக்காக இங்கிலாந்து வங்கியிலும் சர்வதேச பங்கீடு வங்கியிலும் வைத்திருந்தது. பாக்கி தங்கத்தை தன் வசம் வைத்திருந்தது. ஆனால், தற்போது ரிசர்வ் வங்கி, 100 டன் தங்கத்தையும் தன் வசம் மாற்றியிருக்கிறது. இதன் மூலம், தங்கத்தை பாதுகாக்க இங்கிலாந்து வங்கிக்கு ரிசர்வ் வங்கி செலுத்த வேண்டிய பாதுகாப்புக் கட்டணம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வெளியான ரிசர்வ் வங்கியின் ஆண்டு புள்ளிவிவரப்படி, ரிசர்வ் வங்கி, அந்நியச் செலாவணி கையிருப்பின் ஒரு பகுதியாக 822.10 டன்கள் மதிப்புள்ள தங்கத்தை வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 794.63 டன்களாக இருந்தது.

கடந்த 1991ஆம் ஆண்டு ஜூலை 4 மற்றும் 18ம் தேதிக்கு இடையில், பணப் பரிமாற்றத்தில் ஏற்பட்ட நெருக்கடியின்போது, அதனை சமநிலைப்படுத்த, மத்திய ரிசர்வ் வங்கி 46.91 டன் தங்கத்தை இங்கிலாந்து வங்கியிலும் ஜப்பான் வங்கியிலும் அடகு வைத்து, 400 மில்லியன் டாலர் பணத்தை திரட்டியது. இதற்கிடையே சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, ரிசர்வ் வங்கி சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 200 டன் தங்கத்தை வாங்கியிருந்தது.

அதுபோல, 2009 ஆம் ஆண்டில், மத்திய அரசு தனது சொத்துக்களை பெருக்கும் நடவடிக்கையாக 6.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள 200 டன் தங்கத்தை வாங்கியது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக, ரிசர்வ் வங்கி தனது கொள்முதல் நடவடிக்கை மூலம் தங்கப் பங்குகளில் கவனம் செலுத்தி நிலையான வளர்ச்சியை தொடர்ந்து பராமரித்து வருகிறது.

இந்தியாவின் மொத்த அன்னியச் செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்கு 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 7.75 சதவீதமாக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் இது 8.7 சதவீதமாக அதிகரித்தது.

மும்பையின் மின்ட் ரோடு மற்றும் நாக்பூரில் உள்ள ரிசர்வ் வங்கியின் கட்டடங்களில் இந்த கையிருப்பு தங்கம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

உலக தங்க கவுன்சில் வெளியிட்ட அறிக்கையின்படி, உலக நாடுகளின் மத்திய வங்கிகள், இதுவரை தோண்டியெடுக்கப்பட்ட தங்கத்தில் 17 சதவீதத்தை பெட்டகங்களில் வைத்துள்ளன. அதாவது 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 36,699 டன்கள் தங்கம் வங்கிகளின் கையிருப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com