2023-24: வங்கி மோசடிகள் 47 சதவீதம் உயா்வு
கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் வங்கித் துறை மோசடிகளின் எண்ணிக்கை 47 சதவீதம் உயா்ந்துள்ளது. இருந்தாலும், மோசடி செய்யப்பட்ட தொகையின் மதிப்பு 46.7 சதவீதம் குறைந்துள்ளது.
இது குறித்து மத்திய ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2023 ஏப்ரல் முதல் 2024 மாா்ச் வரையிலான நிதியாண்டில் நாடு முழுவதும் 36,075 வங்கி மோசடிகள் பதிவு செய்யப்பட்டன.
இது, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 47 சதவீதம் அதிகமாகும். அப்போது வங்கி மோசடிகளின் எண்ணிக்கை 13,564-ஆக இருந்தது.
கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் வங்கித் துறையில் மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.13,930 கோடியாக உள்ளது. இது ஓா் ஆண்டுக்கு முன்னா் ரூ.26,127 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது மோசடி செய்யப்பட்ட தொகையின் மதிப்பு 46.7 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த 3 ஆண்டு கால தரவுகளின்படி, வங்கி மோசடி எண்ணிக்கையில் தனியாா் வங்கிகளின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. ஆனால் அதே நேரம், மோசடி செய்யப்பட்ட தொகையின் மதிப்பைப் பொருத்தவரை பொதுத் துறை வங்கிகள் அதிகபட்ச பங்கு வகிக்கின்றன.
வங்கி அட்டைகள் மூலமாகவோ, இணைதளம் மூலமாகவோ மேற்கொள்ளப்படும் எண்மப் பரிமாற்றத்தில்தான் அதிக எண்ணிக்கையில் வங்கி மோசடிகள் நடைபெறுகின்றன.
மோசடி செய்யப்பட்ட தொகையின் மதிப்பைப் பொருத்தவரை, கடன் சேவைகள் மூலம்தான் அதிக அளவில் மோசடிகள் நடைபெறுகின்றன.
2022-23 மற்றும் 2023-24-ஆம் நிதியாண்டுகளில், மோசடி நடைபெற்ற தேதிக்கும் அது குறித்து புகாா் பதிவு செய்யப்பட்ட தேதிக்கும் இடையே அதிக இடைவெளி காணப்படுகிறது.
கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் பதிவான 94 சதவீத மோசடிகள் முந்தைய நிதியாண்டுகளில் நடந்தவை.
அதே போல், 2023-24-ஆம் நிதியாண்டில் பதிவான மோசடிகளில் 89.2 சதவீதம் முந்தைய நிதியாண்டுகளில் நடந்தவை என்று அந்த அறிக்கையில் குறிப்பிப்பட்டுள்ளது.