
அரசியலில் ஈடுபடுவதற்கான நேரம் இதுவல்ல என்றும், தேசியத் தலைநகருக்கு ஒரு மாதத்திற்கு தண்ணீர் வழங்குமாறு ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாஜகவைக் கேட்குமாறு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார்.
தில்லியில் கடந்த சில நாள்களாகக் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றது. தில்லியின் பங்கு தண்ணீரை ஹரியாணா விடுவிக்கவில்லை என்று அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக முதல்வர் கேஜரிவாலின் எக்ஸ் தளத்தில்,
ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக திட்டமிட்ட போராட்டத்தால் பிரச்னையைத் தீர்க்க முடியாது. இந்த நேரத்தில் அரசியல் செய்வதற்குப் பதிலாக, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தில்லி மக்கள் அனைவரையும் கைகளைக் கூப்பி கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
பாஜக ஹரியாணா மற்றும் உ.பி. அரசுகளுடன் பேசி ஒரு மாதத்திற்கு தில்லிக்கு தண்ணீர் கொடுத்தால் தில்லி மக்கள் பாஜகவின் நடவடிக்கையை மிகவும் பாராட்டுவார்கள். கடுமையான வெப்பத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும்.
இதுபோன்ற கடுமையான வெப்பத்தில் தண்ணீருக்கான தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. ஆனால், அண்டை மாநிலங்களில் இருந்து தில்லிக்கு வரும் தண்ணீரும் குறைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
"தேவை அதிகரித்தும், வழங்குவது குறைந்தும் உள்ளது. இதற்கு நாம் அனைவரும் இணைந்து தீர்வு காண வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.
சனிக்கிழமை வரை இடைக்கால ஜாமீனில் வெளியே வந்திருக்கும் கேஜரிவால் நாடு முழுவதும் வரலாறு காணாத வெப்பத்தை அனுபவித்து வருவதாகக் கூறினார், இந்த நேரத்தில் நாடு முழுவதும் தண்ணீர் மற்றும் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆனால், தில்லியில் மின் நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும், கடந்தாண்டு தில்லியில் அதிகபட்சமாக 7438 மெகாவாட் மின்சாரத் தேவை இருந்தது. இந்தாண்டுடன் ஒப்பிடுகையில், உச்ச தேவை 8302 மெகாவாட்டை எட்டியுள்ளது. இருப்பினும், தில்லியில் மின்சார நிலைமை கட்டுக்குள் உள்ளது, மற்ற மாநிலங்களைப் போல மின்வெட்டு இல்லை என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.