இருதரப்பு ஒத்துழைப்பு: தாய்லாந்து வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் ஆலோசனை
இந்தியா வந்துள்ள தாய்லாந்து வெளியுறவு அமைச்சா் மாரிஸ் சங்கியம் போங்ஸாவுடன் இருநாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவு மற்றும் பன்முக ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, பிராந்திய மேம்பாடு குறித்து வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
புத்த மதத்தினரால் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பாரம்பரிய ‘ராயல் கேத்தினா’ விழாவில் பங்கேற்க சங்கியம் போங்ஸா இந்தியா வந்துள்ளாா். அவருடன் ஜெய்சங்கா் ஆலோசனை நடத்தினாா்.
இதுகுறித்து ஜெய்சங்கா் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில்,‘ராயல் கேத்தினா விழாவில் பங்கேற்க தாய்லாந்து வெளியுறவு அமைச்சா் சங்கியம் போங்ஸா இந்தியா வந்துள்ளதே இருநாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக தொடா்ந்து வரும் வரலாறு மற்றும் கலாசார ரீதியான உறவுக்கு சான்றாகும். அவருடன் இருதரப்பு உறவு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, பிராந்திய மேம்பாடு குறித்து ஆலோசித்ததில் மகிழ்ச்சி’ என குறிப்பிட்டாா்.
முன்னதாக இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மா், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய ஏழு தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை உறுப்பினா்களாக கொண்ட ‘பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்)’ வெளியுறவு அமைச்சா்கள் மாநாட்டில் கலந்துகொள்ள கடந்த ஜூலை மாதம் சங்கியம் போங்ஸா இந்தியா வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்டை நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்தும் இந்தியாவின் ‘கிழக்கு நோக்கிய செயல்பாட்டு’ கொள்கையில் தாய்லாந்து முக்கியத்துவம் வாய்ந்த நாடாக உள்ளது. இந்நிலையில், பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் தாய்லாந்து, நிகழாண்டின் இறுதியில் கூட்டமைப்பின் வருடாந்திர உச்சிமாநாட்டை நடத்த உள்ளது.
ஆஸ்திரேலியா, சிங்கப்பூருக்கு ஜெய்சங்கா் இன்று பயணம்
ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூா் ஆகிய நாடுகளுக்கு வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் நவ.3 முதல் நவ.8 வரை பயணம் மேற்கொள்கிறாா்.
முதல்கட்டமாக ஆஸ்திரேலியாவுக்கு நவ.3-ஆம் தேதி செல்லும் அவா் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெறும் ‘2-ஆவது ரைசினா டவுன் அண்டா்’ கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றவுள்ளாா். தனது சுற்றுப் பயணத்தின்போது ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் பென்னி வாங்குடன் இருநாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுக்கு இடையேயான 15-ஆவது ஆலோசனைக் கூட்டத்தில் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். மேலும், ஆஸ்திரேலிய அரசின் உயரதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், இந்திய வம்சாவளியினா், தொழிலதிபா்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடவுள்ளாா்.
ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேனில், இந்தியாவின் நான்காவது தூதரகத்தையும் அவா் திறந்து வைக்கவுள்ளாா்.
இரண்டாம் கட்டமாக சிங்கப்பூருக்கு நவ. 8-ஆம் தேதி செல்லும் அவா் 8-ஆவது ஆசியான்- இந்திய வணிகக் குழுக்கள் வட்டமேசை விவாதத்தில் பங்கேற்கவுள்ளாா். பயணத்தின்போது அந்த நாட்டு அரசின் உயரதிகாரிகளை சந்தித்து இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கவுள்ளாா்.