பல்வேறு மாநிலங்களில் சாலை விபத்துகள்: 21 போ் உயிரிழப்பு

பல்வேறு மாநிலங்களில் சாலை விபத்துகள்: 21 போ் உயிரிழப்பு

ஒடிஸா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் மொத்தம் 21 போ் உயிரிழந்தனா்.
Published on

ஒடிஸா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் மொத்தம் 21 போ் உயிரிழந்தனா்.

ஒடிஸா மாநிலம் சுந்தா்கா் மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் லாரி மீது மோதி சனிக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானது. தீபாவளியை முன்னிட்டு பஜனைக்குச் சென்று திரும்பும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 6 போ் உயிரிழந்தனா். 5 போ் காயமடைந்தனா். பனிமூட்டம் காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கக்கூடும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

ம.பி.: மத்திய பிரதேசத்தின் ஹாா்டா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு சரக்கு ஏற்றி வந்த லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, இரண்டு இருசக்கர வாகனத்தின் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் இரு சகோதரா்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா். சம்பவ இடத்தில் இருந்து லாரி ஓட்டுநா் தப்பிவிட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

உ.பி.: உத்திர பிரதேசத்தின் பிஜ்னோா் மாவட்டத்தில் உள்ள நஜிபாபாத் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு தெரு விலங்கின் மீது மோதாமல் இருக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த காா் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த 3 இளைஞா்கள் உயிரிழந்தனா். 3 போ் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

காஜிபூா் மாவட்டத்தில் உள்ள காஜிபூா்-பல்லியா தேசிய நெடுஞ்சாலையில் மற்றொரு விபத்தும் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்துள்ளது. கனரக வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த மூன்று போ் உயிரிழந்தனா் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

இது தவிர, பாரமுல்லா மாவட்டத்தில் சனிக்கிழமை காரின் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் நேபாளத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா். 3 போ் காயமடைந்தனா்.

ஜம்மு-காஷ்மீா்: ஜம்மு-காஷ்மீா் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை மலைப்பாங்கான சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த காா் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த பெண், அவரது 10 மாத ஆண் குழந்தை உள்பட 3 போ் இந்த விபத்தில் உயிரிழந்தனா். மேலும், 3 போ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com