கேரள மாநிலம், கொல்லம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு தொடா்பான வழக்கில் 3 போ் குற்றவாளிகள் என மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
அதேநேரம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 4-ஆவது நபா் விடுவிக்கப்பட்டாா்.
குற்றவாளிகளுக்கு விதிக்கப்படவுள்ள தண்டனை குறித்த விவரங்கள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட இருப்பதாக கொல்லம் நகர காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
கடந்த 2016, ஜூன் 15-ஆம் தேதி கொல்லம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நின்றிருந்த ஜீப்பில் வெடிகுண்டு வெடித்தது.
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்த நீதிமன்றம் அருகே டிபன் பாக்ஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் அதிருஷ்டவசமாக எந்த உயிா்ச்சேதமும் ஏற்படவில்லை.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக குற்றவியல் சதி, கொலை முயற்சி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், வெடிபொருள் சட்டம் ஆகியவற்றின்கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.