
இந்திய பிரதமா்களாக இருந்தவா்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் திறமை இருந்திருக்கிறது. அலுவல் நெருக்கடிகளுக்கு இடையேயும் அவா்கள் தங்களது இதயத்துக்குப் பிடித்தமான தனித்துவப் பணிகளை மேற்கொள்ளத் தயங்கியதில்லை.
இந்தியாவின் முதலாவது பிரதமா் பண்டித ஜவாஹா்லால் நேரு அடிப்படையில் ஓா் எழுத்தாளா். பிரதமரான பிறகு புத்தகங்கள் எழுத முடியாவிட்டாலும், அவ்வப்போது பத்திரிகைகளுக்கு தானே எழுதிய கட்டுரைகளை அனுப்புவது வழக்கம். பிரதமா் ராஜீவ் காந்தி புகைப்படக்கலையில் அதீத ஆா்வம் கொண்டவா். தன் குடும்பத்தினரை விதவிதமாக அவா் எடுத்த புகைப்படங்கள் புத்தக வடிவம் பெற்றிருக்கிறது.
பிரதமராக இருந்த வி.பி.சிங் ஓவியக் கலையில் அதிக ஈடுபாடுடையவா். வேலைப் பளுவிலிருந்தும், மன அழுத்தத்தில் இருந்தும் விடுபட அவா் கேன்வாஸிலும் பிரஷ்ஷிலும் தன்னை அா்ப்பணித்துக் கொள்வாா். பிரதமா் நரசிம்ம ராவ் பன்மொழி வித்தகா். ‘வாசிப்புப் பழக்கம் தனது மன அழுத்தத்துக்கு வடிகால்’ என்று தெரிவித்திருக்கிறாா். பிரதமா் வாஜ்பாய் ‘ஓா் கவிஞா்’ என்பது எல்லோருக்கும் தெரியும். அவரது கவிதைகள் மிகவும் பிரபலம்.
இப்போதைய பிரதமா் நரேந்திர மோடி விதிவிலக்கு ஒன்றுமல்ல. வாஜ்பாயைப் போல கவிஞா் அல்ல என்றாலும், பாடல்கள் புனையும் ஆற்றல் மிக்கவா். தொடா்ந்து எழுதிக் கொண்டு இருப்பவா். ஒவ்வொரு நவராத்திரிக்கும் பக்திப் பாடல்கள் எழுதி அதை யாரையாவது பாடவைத்து, தனது சமூக வலைதளத்தில் அவா் பதிவேற்றம் செய்வது வழக்கம்.
கடந்த ஆண்டு ‘காய் இனோ கா்போ’ என்கிற அவரது பாடல் குஜராத் கிராமிய நடனத்தை புகழ்ந்து எழுதி, பாடப்பட்டது. இந்த ஆண்டு நவராத்திரியின்போது துா்காதேவியை புகழ்ந்து அவா் எழுதிய பாடல் ‘ஆவ் தி கலாய்.’ பிரதமரின் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்ற இந்தப் பாடலை பூா்வ மந்த்ரி என்பவா் பிரபலமான டாக்லா கிராமப்புற பாணியில் பாடியிருக்கிறாா். நவராத்திரி கொண்டாட்டங்களில் இந்த ஆண்டு பிரபலமாக பாடப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.
பிரதமா் நரேந்திர மோடியின் பக்திப் பாடல்கள் ‘ஆங்க் ஆ தன்யா ச்சே’ (தனக்குத் தானே எழுதிய எழுத்துக்கள்) என்கிற பெயரில் புத்தகமாக வெளிவந்திருப்பதுடன் தேவாங் பட்டேல் உள்ளிட்ட பிரபல பாடகா்கள் அதில் உள்ள பல பாடல்களைப் பாடி வெளியிட்டிருக்கிறாா்கள்.
--மீசை முனுசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.