
வடமாநிலங்களில் விமரிசையாகக் கொண்டாடப்படும் சத் பூஜை இன்று சடங்குகளுடன் தொடங்கியுள்ளது.
இந்து கலாசாரத்தில் சூரிய வழிபாடு மிகவும் முக்கியமானது. சூரியனைப் போற்றி வணங்கும் பண்டிகைகளில் முக்கிய பண்டிகையாக சத் பூஜை திகழ்கிறது.
பிகார், கிழக்கு உத்தப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும், தில்லியிலும் சத் பூஜை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக பிகார், உ.பி.யைச் சேர்ந்த பூர்வாஞ்சலிகள் இந்த வழிபாட்டை மேற்கொள்கின்றனர்.
சத் பூஜை என்றால் என்ன?
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் சுக்கில பக்ஷத்தின சதுர்த்தி முதல் சஷ்டி திதி வரை சத் பூஜை கொண்டாடப்படுகிறது. இது டாலா சத் மற்றும் சூரிய சஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது. நான்கு நாள்கள் கொண்டாடப்படும் இந்த விழாவின்போது பல சடங்கள் செய்யப்படுகின்றன. சத் பூஜை முக்கியமாக சூரிய பகவானை வழிபடும் பண்டிகையாகும்.
முதல் நாளில் நஹாய்-காய் சடங்குடன் தொடங்குகிறது. இரண்டாவது நாளில் கர்னா, மூன்றாவது நாளில் மாலை மறையும் சூரியனையும், நான்காவது நாள் காலை உதிக்கும் சூரியனையும் பக்தர்கள் வழிபாடுவார்கள. இடுப்பளவு தண்ணீரில் இறங்கி சூரியனை பூஜை செய்து வழிபடுவார்கள்.
எதற்காக இந்த சத் பூஜை?
பூஜை செய்யும் பக்தர்கள் 36 மணி நேரம் தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல் கடுமையான விரதம் மேற்கொள்வார்கள். குடும்ப நலனுக்காகவும், குழந்தைகள் வளமாக வாழ்வதற்காகவும் சூரிய பகவானின் அருள்வேண்டி ஆண்களும், பெண்களும் வழிபடுவார்கள்.
பெரும்பாலும் பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டிப்பது வழக்கம். சூரியனை வணங்கி பூஜை செய்வதால் சூரிய பகவானின் ஆற்றலால் நோய்கள் குணமடைந்து ஆரோக்கியம் பெருகும், வாழ்வில் மகிழ்ச்சி மேலோங்கும் என்பது ஐதீகம்.
இன்று முதல் நான்கு நாள்கள்..
இந்தாண்டுக்கான சத் பூஜை இன்று(05.11.24) தொடங்கி நான்கு நாள்கள் (08.11.24) அன்று நிறைவடைகின்றது. இன்று காலை யமுனை, கங்கை உள்ளிட்ட முக்கிய படித்துறைகளில் மக்கள் புனித நீராடி பூஜை மற்றும் சடங்குகளை மேற்கொண்டனர்.
பக்தர்கள் ஒருவருக்கொருவர் நெற்றியில் சிவப்பு திலகமிட்டு வழிபட்டனர். மேலும் சூரியனுக்கு உகந்த இனிப்புகளைப் படைத்து வழிபட்டனர். முதல் நாளான இன்று காலை ஏராளமான பக்தர்கள் படித்துறைகளில் சத் பூஜையை செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.