
பிரதமர் நரேந்திர மோடி வருகையின்போது பாதுகாப்பு காரணம் காட்டி, தனது ஹெலிகாப்டரை எடுக்க அனுமதி அளிக்காமல் தாமதம் செய்தது குறித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கடிதம் எழுதியுள்ளார்.
அனைத்துக் கட்சிகளின் நட்சத்திரப் பேச்சாளர்களையும் சமமாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் கடிதம் வாயிலாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அந்த கடித்ததில், பிரதமர் செல்லும்போது அவரது பாதுகாப்பு கருதி அவரது விமானம் பறக்கும் 50 கி.மீ. சுற்று வட்டாரத்தில் 15 நிமிடங்கள் வரை வேறு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
ஆனால், ஜார்க்கண்ட் முதல்வர் 150 கி.மீ. தொலைவில் பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அவரது ஹெலிகாப்டர் பறக்க அனுமதி வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், மாநிலத்தின் முதல்வருமான ஹேமந்த் சோரன், மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள குத்ரி தொகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் 1:15 மணிக்கு முதல் கூட்டத்திலும், சிம்தேகா மாவட்டத்தின் பஜார் தாட் பகுதியில் பிற்பகல் 2:25 மணிக்கு இரண்டாவது கூட்டமும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது.
அதே நாளில் பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரதமருமான மோடி, சாய்பாசா கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 2:40 மணிக்கு பிரசாரம் செய்தார்.
பிரதமர் பிரசாரம் செய்த சாய்பாசாவிலிருந்து ஹேமந்த் சோரன் பிரசாரம் செய்த குத்ரிக்கு 80 கி.மீ. தொலைவு, குத்ரியில் இருந்து சிம்டேகாவுக்கு 90 கி.மீ. தொலைவு உள்ளது. ஆனால், பிரதமரின் பாதுகாப்பை காரணம் காட்டி, ஒன்றரை மணிநேரம் ஹேமந்த சோரனின் ஹெலிகாப்டருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை எனக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாரபட்சமின்றி சமமான தேர்தல் களத்தை அனைத்துக் கட்சிகளுக்கும் உருவாக்குவதை குடியரசுத் தலைவர் தலையிட்டு உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.