ராகுல் குடியுரிமை விவகாரத்தில் சிபிஐ விசாரணை: தில்லி உயா்நீதிமன்றத்தில் தகவல்
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இந்திய மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையை பெற்றிருக்கும் விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருவதாக தில்லி உயா்நீதிமன்றத்தில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கையை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரி பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தில்லி உயா்நீதிமன்றத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகன், நீதிபதி துஷாா் ராவ் கெடிலா ஆகியோா் அடங்கி அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இதே விவகாரம் தொடா்பாக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நிலுவையில் உள்ளது. அந்த மனு மீது கடைசியாக கடந்த அக்டோபா் 24-ஆம் தேதி அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த விவகாரம் தற்போது சிபிஐ விசாரணையில் உள்ளது. மேலும், வழக்கு விசாரணை முடியும் நிலைக்கு வந்துவிட்டது. அதோடு, ஒரே கோரிக்கை தொடா்பாக இரு நீதிமன்றங்கள் ஒரே நேரத்தில் விசாரிக்க முடியாது. எனவே, சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்’ என்று கா்நாடக பாஜக நிா்வாகியும் மனுதாரருமான எஸ். விக்னேஷ் சிஷிா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. ‘தனது மனுவுக்கும், அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் சிஷிா் தாக்கல் செய்துள்ள மனுவுக்கும் வேறுபாடு உள்ளது. சிஷிா் மனுவில், ராகுல் காந்தி இந்தியா் அல்ல. அவா் பிரிட்டன் குடிமகன். எனவே, அவா் மீது குற்ற வழக்கு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. ஆனால், எனது மனுவில் ராகுல் இரு நாடுகளின் குடியுரிமையை வைத்திருக்க முடியாது என்று ஆதாரத்துடன் புகாா் தெரிவிக்கப்பட்டு, அவருடைய இந்திய குடியுரிமையை ரத்து செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வலியுறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடா்பான விவரங்கள் மற்றும் ஆதாரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்யுமாறு விக்னேஷ் சிஷிருக்கு உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பா் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.