Supreme Court
உச்சநீதிமன்றம்

நோட்டீஸ் அளிக்காமல் வீடு இடிப்பு: ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உ.பி.அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சாலை விரிவாக்கப் பணிக்காக நோட்டீஸ் அளிக்காமல் வீட்டை இடித்ததற்காக உத்தர பிரதேச மாநில அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

சாலை விரிவாக்கப் பணிக்காக நோட்டீஸ் அளிக்காமல் வீட்டை இடித்ததற்காக உத்தர பிரதேச மாநில அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், ஒரே இரவில் வீட்டை இடித்ததற்கு அதிகாரிகள் அல்லது ஒப்பந்ததாரா் காரணமா? என்று தலைமைச் செயலா் விசாரணை நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சாலை விரிவாக்கத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த இந்த வழக்கின் உத்தரவை அனைத்து மாநில தலைமைத் செயலா்களுக்கும் உச்சநீதிமன்ற பதிவாளா் அனுப்ப வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு, உத்தர பிரதேசத்தின் மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தில் சாலை விரிவாக்கத் திட்டத்துக்காக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் முன்அறிவிப்பு இல்லாமல் இடிக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே பி பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை விசாரித்தது.

அப்போது, ‘அரசு புல்டோசருடன் வந்து ஒரே இரவில் மக்களின் வீட்டை இடித்துவிட முடியாது. வீட்டில் உள்ள பொருள்களுக்கு யாா் பொறுப்பேற்பது. நிலங்களை கையகப்படுத்திவிட்டு நோட்டீல் அளித்த பின்னா் அரசு வீடுகளை இடித்திருக்க வேண்டும். சட்ட விரோதமாக ஒரே இரவில் வீடுகளை இடிப்பது அரசின் மேலாதிக்க நிலையை காட்டுகிறது. வீட்டை இழந்த உரிமையாளுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீட்டை மாநில அரசு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

உத்தர பிரதேச அரசின் ‘புல்டோசா்’ நடவடிக்கைகள் குறித்து ஏற்கெனவே கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள உச்சநீதிமன்றம், அதுதொடா்பாக இடைக்கால தடையும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com