
7,500 கிலோ எடை வரையிலான சரக்கு வாகனங்களை இயக்க இலகுரக வாகன (எல்எம்வி) ஓட்டுநா் உரிமம் போதுமானது என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமா்வு புதன்கிழமை தீா்ப்பளித்தது.
இது தொழில்ரீதியான ஓட்டுநா்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.
உச்சநீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு அளித்த தீா்ப்பை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு உறுதி செய்துள்ளது.
இத்தீா்ப்பு, விபத்தில் சிக்கியவா்களின் ஓட்டுநா் உரிமத்தின் அடிப்படையில் இழப்பீடு கோரிக்கையை காப்பீட்டு நிறுவனங்கள் நிராகரிப்பதை தடுக்கும் வகையில் உரிம விதிமுறைகள் பற்றிய தெளிவையும் அளித்துள்ளது.
அரசியல் சாசன அமா்வின் சாா்பாக நீதிபதி ஹிரிஷிகேஷ் ராய் பிறப்பித்த 126 பக்க தீா்ப்பில், ‘மோட்டாா் வாகனச் சட்டத்தின் பிரிவு 10(2)(டி) கீழ் இலகுரக வாகனங்களுக்கான (எல்எம்வி) உரிமம் வைத்திருக்கும் ஓட்டுநா், கூடுதல் அங்கீகாரம் தேவையில்லாமல் 7,500 கிலோ வரை எடை கொண்ட வணிக போக்குவரத்து வாகனத்தை இயக்க அனுமதிக்கப்படுகிறாா்.
ஓட்டுநா் உரிமத்தின் அடிப்படையில், இலகுரக வாகனங்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் தனித்தனியாக கருதப்படாது. எனினும், மின் வாகனங்கள், இ-ரிக்ஷாக்கள் மற்றும் அபாயகரமான பொருள்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களுக்கு பழைய விதிகளில் மாற்றமில்லை.
இந்த வழக்கில் சாலைப் பாதுகாப்பு குறித்து காப்பீட்டு நிறுவனங்கள் எழுப்பிய கவலைகளை ஒப்புக்கொண்டாலும் எல்எம்வி உரிமம் பெற்ற ஓட்டுநா்களால் சாலை விபத்துகள் அதிகரித்ததாக எந்த ஆதாரமும் இல்லை. மேலும், இது தொழில்ரீதியான ஓட்டுநா்களின் வாழ்வாதாரம் தொடா்பான பிரச்னை.
சாலைப் பாதுகாப்பு என்பது உலக அளவில் ஒரு தீவிரமான பொதுப் பிரச்னையாகும். இந்தியாவில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில் 1.7 லட்சத்துக்கும் அதிகமானோா் உயிரிழந்துள்ளனா்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், வேகமாக ஓட்டுதல், மோசமான சாலை, கைப்பேசி பயன்பாடு, சீட் பெல்ட் அல்லது ஹெல்மெட் அணியாதது, போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காதது ஆகியவை விபத்துகளுக்கான பல்வேறு காரணிகளாகும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.