
பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு ரூ.5 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அழைப்பு வந்த செல்போன் 5 நாள்களுக்கு முன்பு காணாமல் போனது தெரிய வந்துள்ளது.
மும்பை காவல்துறையினர், மிரட்டல் வந்த தொலைபேசி எண் யாருடையது என்று விசாரணை நடத்தி, அந்த செல்போன் எண்ணுக்குச் சொந்தக்காரரையும் கண்டறிந்தனர்.
குற்றவாளியை நெருங்கிவிட்டதாகக் காவல்துறையினர் கருதிய நிலையில்தான், அவர் சொன்ன தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, தனது செல்போன் நவ.2ஆம் தேதி காணாமல் போய்விட்டதாகவும், இது பற்றி காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
இன்று காலை, சம்பந்தப்பட்ட நபரின் வீட்டுக்கு மும்பை காவல்துறையினர் சென்றிருக்கிறார்கள். அவரிடம் இந்த தகவல் குறித்து சொன்னதும், அவர் தனது செல்போன் தொலைந்துவிட்டதைக் கூறியிருக்கிறார். தன் செல்போனை திருடியவர்கள் அதனை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்றும் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தை காவல்துறையினர் பதிவு செய்திருக்கிறார்கள்.
நவம்பர் 5ஆம் தேதி மும்பை காவல்நிலையத்துக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசியவர், ஹிந்துஸ்தானி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டதாகவும், தான் ஷாருக்கான் வீட்டுக்கு வெளியேதான் நிற்பதாகவும், அவர் எனக்கு 50 லட்சம் தரவில்லை என்றால், நான் அவரைக் கொன்றுவிடவிருப்பதாகவும் கூறியிருந்தார். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.