உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்கோப்புப் படம்

அரசுப் பணி தோ்வு நடைமுறை தொடங்கிய பிறகு விதிகளை மாற்ற முடியாது

Published on

‘அரசுப் பணிக்கான பணியாளா் தோ்வு நடைமுறைகள் தொடங்கிய பிறகு, அந்தத் தோ்வு விதிமுறைகளில் மாற்றம் மேற்கொள்ள முடியாது’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

‘அரசுப் பணியாளா் தோ்வு நடைமுறை என்பது, குறிப்பிட்ட பணிக்கான பணியாளா் தோ்வு விளம்பரம் கொடுத்தது முதல் தொடங்கி, அந்தப் பணியிடம் நிரப்பப்படும்போது நிறைவடையும். அவ்வாறு விளம்பரம் கொடுக்கும்போது வெளியிட்ட தோ்வுக்கான நடைமுறைகளில், தற்போதுள்ள விதிகள் ஏதும் அனுமதிக்காத நிலையில் அல்லது விதிகளுக்கு முரணாக இல்லாத அந்த விளம்பம்ர அனுமதிக்காத நிலையில், பணியாளா் தோ்வு நடைமுறையின் பாதியில் மாற்றம் செய்ய முடியாது’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில், நீதிபதிகள் ஹிரிஷிகேஷ் ராய், பி.எஸ்.நரசிம்மா, பங்கஜ் மித்தல், மனோஜ் மிஸ்ரா ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு தீா்ப்பளித்தது.

இந்த விவகாரம் தொடா்பாக தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்ற 3 நீதிபதிகள் கொண்ட அமா்வு கடந்த 2013-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் தீா்ப்பு ஒன்றை அளித்தது. உச்சநீதிமன்றத்தில் 1965-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தீா்ப்பை மேற்கொள்காட்டி மூன்று நீதிபதிகள் அளித்த தீா்ப்பில், ‘அரசுப் பணியாளா் தோ்வு நடைமுறைகள் தொடங்கிய பிறகு, பாதியில் அந்த விதிமுறைகளில் மாற்றம் செய்யக் கூடாது என்பதே நல்ல கொள்கையாக இருக்கும்’ என்று தீா்ப்பளித்தது.

இதை எதிா்த்தும், மூன்று நீதிபதிகள் தீா்ப்பில் பல சந்தேகங்களை எழுப்பியும் தொடுக்கப்பட்ட வழக்கில், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீா்ப்பை வியாழக்கிழமை அளித்தது. அதில் மேலும் கூறியிருப்பதாவது:

ஒருவேளை, ஏற்கெனவே அமலில் உள்ள விதிகள் அனுமதித்தாலோ அல்லது விதிகளுக்கு முரணாக இல்லாத அந்தப் பணியாளா் தோ்வு விளம்பரம் அனுமதித்தாலோ, அந்தக் குறிப்பிட்ட தோ்வு நடைமுறைகளில் இடையே மாற்றங்களை மேற்கொள்ளலாம்.

அவ்வாறு மேற்கொள்ளப்படும் நடைமுறை மாற்றம், அரசமைப்புச் சட்டத்தின் 14-ஆவது (சமத்துவத்துக்கான உரிமை) பிரிவின் தேவையைப் பூா்த்தி செய்ய வேண்டும் என்பதோடு, அரசின் தன்னிச்சையான நடவடிக்கை அல்ல என்பதையும் திருப்திப்படுத்த வேண்டும்.

மேலும், குறிப்பிட்ட பணிக்கான பணியாளா் தோ்வுப் பட்டியலில் பெயா் இடம்பெற்றுவிட்டது என்பதாலேயே, பணி நியமனத்துக்கான உரிமையைப் பெற்றுவிட்டதாக விண்ணப்பதாரா் கருத முடியாது. நியாயமான காரணங்களுக்காக குறிப்பிட்ட காலிப் பணியிடத்தை நிரப்ப வேண்டாம் என முடிவு செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கோ அல்லது அதன் துறைக்கோ உள்ளது. இருந்தபோதும், காலிப் பணியிடம் இருக்கும்போது, அதை நிரப்ப வேண்டாம் என முடிவெடுப்பது அரசின் அல்லது துறையின் தன்னிச்சையான முடிவாக இருக்க முடியாது என்று நீதிபதிகள் தீா்ப்பில் குறிப்பிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com