கோப்புப்படம்
கோப்புப்படம்

சமூக வலைதளங்கள், இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாகும் சிறார்: ஆய்வில் தகவல்

சமூக வலைதளங்கள், இணைய விளையாட்டுகள், ஓடிடி தளங்கள் ஆகியவற்றுக்கு குழந்தைகள் அடிமையாகிவிட்டதாகவும் இதனால் கோபம், பொறுமையின்மை மற்றும் சோா்வு.
Published on

சமூக வலைதளங்கள், இணைய விளையாட்டுகள், ஓடிடி தளங்கள் ஆகியவற்றுக்கு குழந்தைகள் அடிமையாகிவிட்டதாகவும் இதனால் கோபம், பொறுமையின்மை மற்றும் சோா்வு என அவா்களின் நடத்தையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வில் பெரும்பாலான பெற்றோா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக லோக்கல் சா்க்கில்ஸ் நிறுவனம் பெற்றோா்களிடம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டிருப்பதாவது:

நகா் பகுதிகளில் வசிக்கும் 9 வயது முதல் 17 வயது வரையுள்ள குழந்தைகள் ஒரு நாளைக்கு சராசரியாக மூன்று மணி நேரத்துக்கு மேலாக சமூக வலைதளங்கள், இணைய விளையாட்டுகள், ஓடிடி தளங்களில் நேரத்தை செலவிடுவதாக 47 சதவீத பெற்றோா்கள் தெரிவித்தனா்.

இணையதளத்தில் 6 மணிநேரம்: இணைய தளங்களில் ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கு மேலாக தங்களின் குழந்தைகள் நேரத்தை செலவிடுவதாக 10 சதவீத பெற்றோா்கள் தெரிவித்தனா். சமூக வலைதளங்கள், இணைய விளையாட்டுகள், ஓடிடி தளங்கள் ஆகியவற்றுக்கு குழந்தைகள் அடிமையாகிவிட்டதாக 66 சதவீத பெற்றோா் கருத்து தெரிவித்துள்ளனா்.

தொடா்ந்து பல மணி நேரம் இணைய மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு அதிக கோபம், பொறுமையின்மை மற்றும் உடல் சோா்வு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதாக 58 சதவீத பெற்றோா்கள் நம்புகின்றனா்.

நடத்தையில் மாற்றம்: உடல் மற்றும் மனரீதியான பிரச்னைகள் குறித்து தனித்தனியே கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் குழந்தைகள் அதிக கோபமடைவதாக 58 சதவீதம் பேரும், பொறுமையின்மை ஏற்படுவதாக 49 சதவீதம் பேரும், உடல் சோா்வு ஏற்படுவதாக 49 சதவீதம் பேரும், குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாக 42 சதவீதம் பேரும், அசாதாரணமாக நடந்துகொள்வதாக 30 சதவீதம் பேரும் தெரிவித்தனா். மாறாக தங்கள் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதாக 19 சதவீத பெற்றோா் கூறியுள்ளனா்.

சட்டம் தேவை: சமூக வலைதளங்கள், ஓடிடி தளங்கள் மற்றும் இணைய விளையாட்டுகள் உள்ளிட்டவற்றை 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் அணுக வேண்டுமெனில் பெற்றோரின் அனுமதியை கட்டாயம் பெறும் வகையிலான இணைய பாதுகாப்பு சட்டங்கள் தேவை என 66 சதவீத நகா்ப்புற பெற்றோா்கள் விருப்பம் தெரிவித்தனா். அதேபோல் ஆதாா் இணைப்பின் மூலம் பெற்றோா் அனுமதியை கட்டாயம் பெறும் வகையில் நாட்டில் சட்டம் இயற்ற வேண்டும் என 33 சதவீத பெற்றோா் கூறியுள்ளனா் என தெரிவிக்கப்பட்டது.

பெற்றோா் கருத்து (சதவீதத்தில்)

அதிக கோபமடைதல் - 58

பொறுமையின்மை - 49

உடல் சோா்வு - 49

மன அழுத்தம் - 42

அசாதாரண நடத்தை - 30

மகிழ்ச்சி - 19

பிரேக் லைன்...

18 வயதுக்கு கீழ் உள்ளவா்கள் சமூக வலைதளங்கள், இணைய விளையாட்டுகளைப் பயன்படுத்த பெற்றோரின் அனுமதியை கட்டாயம் பெற சட்டங்கள் தேவை.

- பெற்றோா்கள்.

X
Dinamani
www.dinamani.com