திருவனந்தபுரம்: அனந்த பத்மநாப சுவாமி திருக்கோவில் ‘அல்பஸி ஆராட்டு’ உற்சவத்துக்காக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் இன்று(நவ. 9) சுமார் 5 மணி நேரம் மூடப்பட்டது.
தற்போது விமான நிலைய ஓடுதளம் அமைந்துள்ள பகுதியில், கோயில் உற்சவத்தையொட்டி சுவாமி வாகன ஊர்வலம் காலங்காலமாக நடைபெற்று வருவது வழக்கம்.
இந்தாண்டு ‘அல்பஸி ஆராட்டு’ உற்சவ சுவாமி வீதியுலா இன்று நடைபெற்றதையொட்டி, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. ஆராட்டு உற்சவத்தையொட்டி திரளான பக்தர்கள் அங்கே திரண்டிருந்து சுவாமியை வழிபட்டனர்.
விமான ஓடுபாதையைக் கடந்து யானைகள் மீது பவனி வந்த சுவாமி விக்கிரகங்கள் விமான நிலையம் அருகே அமைந்துள்ள சங்குமுகம் கடற்கரையை அடைந்து, அங்கே சுவாமி ஆராட்டு நடைபெற்றது. ஆராட்டு விழாவைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர்.