காற்றுமாசு: தில்லியில் பள்ளிகளை மூட அப்போலோ மருத்துவர் பரிந்துரை!

காற்றுமாசு அதிகரிப்பால் தலைநகரில் உள்ள பள்ளிகளை மூட மருத்துவர் பரிந்துரை..
காற்றுமாசு
காற்றுமாசு
Published on
Updated on
2 min read

தேசிய தலைநகரில் காற்று மாசு மிகவும் மோசமடைந்துள்ளதால் மக்கள் பல்வேறு உடல்நல பிரச்னைகளை எதிர்கொள்வதால் பள்ளிகளை அரசு மூட வேண்டும் என்று அப்போலோ மருத்துவர் பரிந்துரைத்துள்ளார்.

உலகளவில் மிகவும் மாசு அதிகமுள்ள நகரங்களில் பாகிஸ்தானின் லாகூருக்கு அடுத்தபடியாக 2-ஆவது இடத்தில் இந்தியாவின் தலைநகா் தில்லியில் தான். இதற்கடுத்து, வியட்னாமின் ஹனாய் மற்றும் எகிப்தின் கைரோ நகரங்கள் அதிக மாசுள்ள நகரங்களின் பட்டியலில் 3-ஆவது மற்றும் 4-ஆவது இடத்தில் உள்ளன.

தில்லி உலகளவில் மாசு நிறைந்த நகரமாக மாறியது ஓரிரு நாளில் நிகழ்ந்த சம்பவம் அல்ல. அரசியல் ரீதியாக பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், தினசரி சாலைகளில் ஓடும் லட்சக் கணக்கான வாகனங்களின் உமிழ்வு மாசு, கட்டுமானங்களின் தூசி மாசு, அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாயப் பயிா்க் கழிவுகள் என பல்வேறு காரணிகள் இந்த விளைவின் பின்னணியில் உள்ளதாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

ஓவ்வொரு ஆண்டும், மத்தியில் மற்றும் தில்லியில் ஆட்சியில் உள்ளவா்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும், காற்று மாசு, அதன் உச்சம் தொடுவதை நிறுத்தவில்லை.

இதுதொடர்பாக அப்போலோ மருத்துவமனையில் மூத்த ஆலோசகர் டாக்டர் நிகில் மோடி கூறுகையில்,

தேசிய தலைநகரில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் காற்று மாசுவினால் மக்கள் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

காற்று மாசுவின் விளைவால் பனிப்புகையாக காட்சியளிக்கும் ஆனந்த் விஹாரில் குடியிருப்புவாசிகள் மற்றும் வெளியூர் பயணிகள் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை எதிா்கொண்டு வருகிறாா்கள். சுமாா் 10 நிமிடம் இப்பகுதியில் நின்றாலே கண் எரிச்சலை உளவுப்பூா்வமாக உணர முடிகிறது.

காற்றின் தரநிலை 400 -500-க்கும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் நோய் ஏற்படுகிறது. மேலும் ஒருசிலருக்கு சுவாசக் கோளாறு, மூக்கு ஒழுகுதல், தும்மல், இருமல் போன்ற பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.

இதனால், குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர். மாசு அளவு ஒரு குறிப்பிட்ட வரம்பைத் தாண்டிய போதெல்லாம் பள்ளிகளை மூடுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளை அரசு உடனடியாக மூட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

தீபாவளிக்குப்பின் ஒன்பதாவது நாளாக நகரின் பல பகுதிகளில் புகைமூட்டம் காணப்பட்டதால், தில்லியின் காற்றின் தரம் தொடர்ந்து 'மிகவும் மோசமான பிரிவில்' உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி காற்றின் தரநிலை 360ஆகப் பதிவாகியுள்ளது.

தில்லியின் பிற முக்கிய பகுதிகளில், பவானா 409, அலிபூர் 387, ஆனந்த் விஹார் 393, துவாரகா செக்டர் 8 இல் 362, ஐஜிஐ விமான நிலையம் 344, தில்சாத் கார்டன் 220, ஐடிஓ 359, முண்ட்கா 359, நஜாஃப்கார்ஹெச் 379 , நியூ மோதி பாக் 411, பட்பர்கஞ்ச் 389, RK புரம் 376 மற்றும் வஜீர்பூர் 399 ஆகப் பதிவானது.

தலைநகரில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான அக்ஷர்தாம், உத்தரப் பிரதேசத்தின் பல முக்கிய பகுதிகளுடன் தில்லியை இணைக்கும் முக்கிய வழித்தடங்களில் காற்றின் தரநிலை 393 ஆகப் பதிவானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com