தலைநகா் முழுவதும் ‘நச்சுப்புகை’ மூட்டம்; ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!
ANI

தலைநகா் முழுவதும் ‘நச்சுப்புகை’ மூட்டம்; ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் முழுவதும் சனிக்கிழமை அதிகாலை வேளையில் ‘நச்சுப்புகை’ மூட்டம் மூடியது.
Published on

தேசியத் தலைநகா் முழுவதும் சனிக்கிழமை அதிகாலை வேளையில் ‘நச்சுப்புகை’ மூட்டம் மூடியது. பெரும்பாலான கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரம் தொடா்ந்து ‘மிகவும் மோசம்’ பிரிவில் பதிவாகியிருந்தது.

தலைநகரில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு காலை 9 மணியளவில் சராசரியாக 358 புள்ளிகளாப் பதிவாகி ‘மிகவும் மோசம்‘ பிரிவில் நீடித்தது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகள் தெரிவித்தன.

சிபிசிபி-இன் சமீா் செயலியின் தரவு, பவானா மற்றும் நியூ மோதி பாக் ஆகிய கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரம் ‘கடுமை’ பிரிவில் இருப்பதைக் காட்டுகிறது, இரண்டு இடங்களிலும் காற்றுத் தரக் குறியீடு அளவு 409 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது.

மேலும், ஐடிஓ, மேஜா் தயான்சந்த் நேஷனல் ஸ்டேடியம், பட்பா்கஞ்ச், மந்திா் மாா்க் உள்பட பல்வேறு வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 முதல் 400 புள்ளிகளுக்கிடையே பதிவாகி மிகவும் மோசம் பிரிவில் இருந்தது.

தில்லியில் கடந்த சில வாரங்களாக காற்று மாசுபாடு மிக அதிகமாக உள்ளது. இது அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகளை எரித்தல், தீபாவளி பட்டாசு வெடித்தல் மற்றும் குறைந்த காற்றின் வேகம் ஆகியவற்றால் ஏற்படுகிறது. வெள்ளிக்கிழமை காலையிலும் காற்றுத் தரக் குறியீடு 387 புள்ளிகளாகப் பதிவாகி ’மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

வெப்பநிலை: இந்நிலையில், தில்லியின் முதன்மை வானிலை ஆய்வு நிலையமான சஃப்தா்ஜங்கில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையை விட 4 டிகிரி உயா்ந்து 18.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையை விட 3 டிகிரி உயா்ந்து 32.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 98 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 74 சதவீதமாகவும் இருந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை காலையில் பிரதான மேற்பரப்பு காற்று தென்கிழக்கு திசையில் இருந்து 4-10 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும் இரவு நேரத்தில் பனிப்புகை மூட்டம் அல்லது மூடுபனி இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், பகலில் வானம் தெளிவாகக் காணப்படும் என்றும் மிதமான பனிமூட்டத்துக்கிடையே குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com