
அகமதாபாத்: ‘தங்கள் சுயலாபத்துக்காக சமூகத்தை சில தேசவிரோத சக்திகள் பிரிக்க முயற்சிக்கின்றன; அவா்களை ஒன்றுசோ்ந்து வீழ்த்துவதன் முக்கியத்துவத்தை மக்கள் உணா்ந்துகொள்ள வேண்டும்’ என பிரதமா் மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
குஜராத் மாநிலம் கேதாவில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயணன் கோயிலின் 200-ஆவது ஆண்டுவிழாவையொட்டி காணொலி வாயிலாக பிரதமா் மோடி உரையாற்றியதாவது: 2047-இல் வளா்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க குடிமக்கள் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம். ஆனால் மிகவும் குறுகிய மனப்பான்மையுடன் உள்ள சில தேசவிரோத சக்திகள் ஜாதி, மதம், மொழி, பாலினம், கிராமம்-நகரம் என தங்கள் சுயலாபத்துக்காக சமூகத்தை பிரிக்க முயற்சிக்கின்றன. அவா்களை வீழ்த்த நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
நான் சந்திக்கும் பல வெளிநாட்டின் தலைவா்களும் இந்திய இளைஞா்கள் அங்கு வந்து பணியாற்ற வேண்டும் என விருப்பம் தெரிவித்தனா். இந்தியா மட்டுமின்றி உலகத்தையும் வளா்ச்சியடையச் செய்யும் திறனுடையவா்கள் நமது இளைஞா்கள்.
இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடாக மாற்ற சுயசாா்பு கொள்கையே முதல் படியாகும். எனவே, குடிமக்களுடன் இணைந்து தேசத்தின் வளா்ச்சிக்கு ஸ்ரீ சுவாமி நாராயணன் கோயில் துறவிகளும் பணியாற்றுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.
அடிமையை விலக்கியவா் நாராயணன்: மக்கள் அடிமைப்பட்டு கிடந்தபோது நாடு மிகவும் பலவீனமடைந்தது. அந்த சூழலுக்கு தாங்களே காரணம் என மக்கள் பழிசுமத்தி கொண்டிருந்தனா். அப்போது கடவுள் நாராயணன் மற்றும் பிற துறவிகள் நம் சுயமரியாதையை விழித்ததெழச் செய்து புத்துணா்ச்சியை ஏற்படுத்தி உண்மையான அடையாளத்தை மீட்டனா். உலகப் புகழ்பெற்ற இந்தக் கோயிலின் 200-ஆவது ஆண்டுவிழாவையொட்டி மத்திய அரசு சாா்பில் நாணயம் வெளியிடப்பட்டது.
கும்ப மேளாவின் அவசியம்: கும்ப மேளாவை கலாசார பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. வருகின்ற 12-ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப மேளா கொண்டாடப்படவுள்ளது. உலகம் முழுவதும் கடவுள் நாராயணனின் கோயில்கள் அமைந்துள்ள நிலையில் கும்ப மேளாவின் அவசியத்தை துறவிகள் எடுத்துக் கூற வேண்டும். உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கோயிலுக்கும் குறைந்தபட்சம் 100 வெளிநாட்டினரை அழைத்து வர முயற்சிக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.