பாபா சித்திக் / கைது செய்யப்பட்ட ஷிவ்குமார்
பாபா சித்திக் / கைது செய்யப்பட்ட ஷிவ்குமார்

பாபா சித்திக் கொலைக் குற்றவாளி பிடிப்பட்டது எப்படி?

முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலைக் குற்றவாளி பிடிப்பட்டது எப்படி என்ற தகவல்
Published on

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கில், தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி சிவ குமார் கௌதம், உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச்சில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேபாளத்துக்கு தப்பிச் செல்லவிருந்த நிலையில், காவல்துறையினர், சிவகுமார் கௌதமை கைது செய்திருக்கிறார்கள்.

இதுபற்றி காவல்துறை கூறுகையில், சிவகுமார் கௌதம், ஹரியாணாவைச் சேர்ந்த கர்நெயில் சிங், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தர்மராஜ் ஆகியோருடன் சேர்ந்து, அக். 12ஆம் தேதி, மும்பையில் உள்ள மகனின் அலுவலகத்துக்கு வெளியே நின்றிருத் பாபா சித்திக்கை சுட்டுக் கொன்றுள்ளார்.

கொலை நடந்ததுமே, மற்ற குற்றவாளிகள் பிடிபட்ட நிலையில், கௌதம் மட்டும் அங்கிருந்து தப்பியோடினார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கௌதம், இருமாநில காவல்துறையின் கூட்டு நடவடிக்கை மூலம் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

முதற்கட்டமாக கௌதமிடம் நடத்திய விசாரணயில், சில நாள்கள் மும்பையில் தங்கியிருந்து சித்திக்கின் நடமாட்டத்தை கவனித்து வந்ததாகவும், அக். 12ஆம் தேதி இரவு அவரைக் கொல்ல சரியான சந்தர்ப்பம் கிடைத்ததும், சுட்டுக்கொன்றதாகவும் கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தனக்கு இருக்கும் தொடர்பை கௌதம் ஒப்புக்கொண்டிருப்பதாகவும், சிறையில் இருக்கும் லாரன்ஸ் தம்பி அன்மோல் பிஷ்னோய் உத்தரவின்பேரிலேயே சித்திக்கை கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

கொலை செய்துவிட்டு முதலில், மத்தியப் பிரதேசம் தப்பிச் சென்றிருக்கிறார். காவல்துறையினர் அவரை பின்தொடர்ந்து அங்குச் சென்றபோதும் அவரை பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் கௌதமின் குடும்ப உறுப்பினர்கள் உள்பட 45 பேரின் நடமாட்டத்தை காவல்துறை கவனித்து வந்தார்கள். அதில் 4 பேர் கௌதமுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அப்போதுதான், சிவக்குமார் கௌதமின் வீட்டுக்கு அருகே இருந்த ஒரு வீடு பாதுகாப்பானதாகக் கருதப்பட்டு நால்வரும் கௌதமை சந்திக்க திட்டமிட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் கௌதமை சதிக்க வந்த போது, நால்வருடன் சேர்த்து சிவக்குமார் கௌதமையும் காவல்துறையினர் சுற்றிவளைத்துக் கைது செய்திருக்கிறார்கள்.

விரைவில் அவர் நேபாளம் தப்பிச் செல்லவிருந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த வழக்கில் 20 பேர் வரை கைதாகியிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com