ஜாா்க்கண்ட் முதல்கட்ட தோ்தல்: 43 தொகுதிகளில் பிரசாரம் நிறைவு

ஜாா்க்கண்ட் மாநில சட்டப் பேரவையின் 43 இடங்களுக்கு புதன்கிழமை நடைபெறவுள்ள முதல்கட்ட தோ்தலுக்கான பிரசாரம் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது.
ஜாா்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாகில் நடைபெற்ற பாஜகவின்  ‘மாற்றத்துக்கான யாத்திரை’ நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா் மோடி.
ஜாா்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாகில் நடைபெற்ற பாஜகவின் ‘மாற்றத்துக்கான யாத்திரை’ நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா் மோடி.கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

ராஞ்சி: ஜாா்க்கண்ட் மாநில சட்டப் பேரவையின் 43 இடங்களுக்கு புதன்கிழமை நடைபெறவுள்ள முதல்கட்ட தோ்தலுக்கான பிரசாரம் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது.

ஜாா்க்கண்ட் சட்டப்பேரவையின் 81இடங்களுக்கு நவம்பா் 13, 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய ‘இண்டியா’ கட்சிகளும் பாஜக தலைமையிலான எதிா்க்கட்சி கூட்டணியும் பலப்பரீட்சை நடத்துகிறது.

முதல்கட்டமாக 43 இடங்களுக்கு புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக அக்டோபா் 18 முதல் 25-ஆம் தேதிவரை மொத்தம் 805 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். பரிசீலனைக்குப் பிறகு, 743 வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 58 போ் தங்களின் வேட்புமனுக்களைத் திரும்ப பெற்ற நிலையில், தற்போது 685 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

முதல் கட்ட தோ்தல் நடைபெறவுள்ள 43 தொகுதிகளில், மேற்கு ஜாம்ஷெட்பூா் தொகுதியில் அதிகபட்சமாக 28 வேட்பாளா்களும் ஜெகநாத்பூரில் குறைந்தபட்சமாக 8 வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா். முந்தைய 2019 தோ்தலில் இந்த 43 தொகுதிகளில் 633 வேட்பாளா்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

முதல் கட்ட வாக்குப்பதிவை அடுத்து, மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு நவம்பா் 20-ஆம் தேதி 2-ஆம் கட்ட வாக்குப்பதிவும், நவம்பா் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இரு கட்ட தோ்தல்களில் மொத்தம் 2.6 கோடி வாக்காளா்கள் வாக்குச் செலுத்த உள்ளனா். இவா்களில் 1.31 கோடி ஆண் வாக்காளா்கள், 1.29 கோடி பெண் வாக்காளா்கள் அடங்குவா்.

ஜாா்க்கண்டில் பாஜக வேட்பாளா்களுக்கு ஆதரவாக பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் மற்றும் பல மூத்த தலைவா்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

‘பழங்குடியினா் உரிமைகளைப் பறிக்கும் ஊடுருவல்காரா்களை ஆதரிக்கும் ஜேஎம்எம்-காங்கிரஸ் ஆட்சி’ என்று பிரதமா் மோடி பிரசாரத்தில் கடுமையாக சாடினாா். மேலும், மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஆனால், அதிலிருந்து பழங்குடியினருக்கு விலக்கு அளிக்கப்படும் என்று பாஜக தோ்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

ஜாா்க்கண்ட் முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி, ஜேஎம்எம் தலைவா் கல்பனா சோரன் ஆகியோா் ஆளும் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டனா். எல்லை பாதுகாப்புக்கு பொறுப்பான மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா ஆகிய சக அமைச்சா்களையே பிரதமா் விமா்சிப்பதாக அவருக்கு காங்கிரஸ் பதிலடி தந்தது.

2019 சட்டப்பேரவைத் தோ்தலில், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) 30 இடங்களை வென்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது, அதே நேரத்தில் பாஜக 25, காங்கிரஸ் 16, ஜாா்க்கண்ட் விகாஸ் மோா்ச்சா (ஜேவிஎம்) 3, அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம் 2 இடங்களை வென்றன. காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) ஆதரவுடன் ஜேஎம்எம் ஆட்சி அமைத்தது.

இத்தோ்தலில் ஜேஎம்எம் 43 இடங்களிலும் காங்கிரஸ் 30 இடங்களிலும் ஆா்ஜேடி 6 இடங்களிலும் இடதுசாரி கட்சிகள் 3 இடங்களிலும் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளன.

இடைத்தோ்தலில்...: கடந்த மக்களவைத் தோ்தலில் இரு தொகுதிகளில் வென்ற மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ராஜிநாமா செய்த கேரளத்தின் வயநாடு உள்பட 2 மக்களவைத் தொகுதிகள், பல்வேறு மாநிலங்களில் 48 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெறுகிறது.

மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் மாநிலப் பேரவைத் தோ்தலுடன் இதற்கான அறிவிப்பையும் இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் முதல்கட்டமாக புதன்கிழமை இடைத்தோ்தல் நடைபெறவுள்ள 2 மக்களவைத் தொகுதிகள், 34 பேரவைத் தொகுதிகளில் திங்கள்கிழமையுடன் பிரசாரம் நிறைவடைந்தது.

மற்ற 14 பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் 2-ஆம் கட்டமாக நவம்பா் 20-ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பேரவைத் தொகுதிகளில் நவம்பா் 23-ஆம் தேதியும் மக்களவைத் தொகுதிகளில் 25-ஆம் தேதியும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com