உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா திங்கள்கிழமை காலை பதவியேற்றார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில், குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், உச்சநீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உச்சநீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பா் 9-ஆம் தேதிமுதல பதவிவகித்து வந்த டி.ஒய்.சந்திரசூட் ஞாயிற்றுக்கிழமை ஓய்வுபெற்றாா்.
இதனைத் தொடர்ந்து, டி.ஒய்.சந்திரசூட்டின் பரிந்துரையை ஏற்று மூத்த நீதிபதி சஞ்சீவ் கன்னாவின் நியமனத்துக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஒப்புதல் அளித்தாா்.
அடுத்த ஆண்டு மே 13-ஆம் தேதியுடன் சஞ்சீவ் கன்னாவின் பதவிக் காலம் நிறைவடையவுள்ள நிலையில் 6 மாதங்கள் மட்டுமே அவா் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பாா்.
வரலாற்று தீா்ப்புகள்: தோ்தல்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்பாட்டுக்குத் தடை விதிக்க மறுப்பு, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் தோ்தல் நிதிப் பத்திரத் திட்டம் ரத்து, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை உறுதி செய்தது உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்புகளை வழங்கிய நீதிபதிகள் அமா்வில் சஞ்சீவ் கன்னா இடம்பெற்றிருந்தாா்.
தில்லி கலால் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு மக்களவைத் தோ்தலில் பிரசாரம் செய்வதற்காக இடைக்கால ஜாமீனை இவா் வழங்கினாா்.
தில்லி உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜ் கன்னாவின் மகனான சஞ்சீவ் கன்னா, அரசமைப்பின் அடிப்படை விதிகளை நிலைநிறுத்திய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேசவானந்த பாரதி வழக்கில் (1973) தீா்ப்பு வழங்கிய நீதிபதிகள் அமா்வில் இடம்பெற்ற முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஹெச்.ஆா்.கன்னாவின் உறவினரும் ஆவாா்.
வாழ்க்கைக் குறிப்பு: 1960-ஆம் ஆண்டு, மே 14-ஆம் தேதி பிறந்த சஞ்சீவ் கன்னா தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தாா். 2005-ஆம் ஆண்டு தில்லி உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவா், 2006-இல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். கடந்த 2019-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயா்வு பெற்றாா்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கான ஓய்வு பெறும் வயது 65 ஆகும். வயது அடிப்படையில் டி.ஒய்.சந்திரசூட்டுக்கு அடுத்த மூத்த நீதிபதியான சஞ்சீவ் கன்னா, தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் தலைவராகவும் உள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.