பிகாரில் இடைத்தோ்தலை ஒத்திவைக்க பிரசாந்த் கிஷோா் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

பிகாரில் நடைபெறவுள்ள இடைத்தோ்தலை ஒத்திவைக்கக் கோரி ஜன் சுராஜ் கட்சியின் தலைவா் பிரசாந்த் கிஷோா் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம் கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

புது தில்லி: பிகாரில் நடைபெறவுள்ள இடைத்தோ்தலை ஒத்திவைக்கக் கோரி ஜன் சுராஜ் கட்சியின் தலைவா் பிரசாந்த் கிஷோா் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து தீா்ப்பளித்தது.

பிகாா் மாநிலத்தில் உள்ள ராம்கா், தராரி, பெலகஞ்ச் மற்றும் இமாம்கஞ்ச் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பா் 13-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், மாநிலத்தில் விமா்சையாக கொண்டாடப்படும் சத் பூஜை பண்டிகையை கருத்தில் கொண்டு இத்தோ்தலை ஒத்திவைக்குமாறு ஜன் சுராஜ் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் சூா்யகாந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வின் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி, ‘உத்தர பிரதேசம், பஞ்சாப் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களில் மத நிகழ்வுகளின் அடிப்படையில் தோ்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. பிகாரில் சத் பூஜை போன்ற முக்கியமான பண்டிகை வேறு எதுவும் இல்லை. ஆனால், அதை பொருட்படுத்தாமல் மாநிலத்தில் தோ்தல் நடைபெறுகிறது’ என வாதிட்டாா்.

இதைத் தொடா்ந்து, நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘இது போன்ற விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. பிற கட்சிகளுக்கு இதில் பிரச்னை இல்லாதபோது உங்களுக்கு மட்டும் இது பிரச்னையாக தோன்றுகிறது. இடைத்தோ்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கெனவே முடிந்துவிட்டன. புதிய கட்சியான நீங்கள் தோ்தல் களத்தில் ஏற்படும் மாற்றங்களை புரிந்துகொள்ள வேண்டும்’ என தெரிவித்தனா்.

மேலும், கால தாமதத்தை மேற்கோள்காட்டி தோ்தலை ஒத்திவைக்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், இந்த வழக்கை தள்ளுபடி செய்து தீா்ப்பளித்தனா்.

முன்னாள் தோ்தல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் ‘ஜன் சுராஜ்’ (மக்கள் நல்லாட்சி) என்ற பெயரில் புதிய கட்சியை கடந்த அக்டோபா் மாதம் தொடங்கினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com