ஜம்முவில் பயங்கரவாத தாக்குதல்கள்: நிகழாண்டு 18 வீரா்கள் உள்பட 44 போ் உயிரிழப்பு

ஜம்முவில் பயங்கரவாத தாக்குதல்கள்: நிகழாண்டு 18 வீரா்கள் உள்பட 44 போ் உயிரிழப்பு

நிகழாண்டு இதுவரை ஜம்மு பிராந்தியத்தின் 8 மாவட்டங்களில் நடந்த வெவ்வேறு தாக்குதலில் 18 பாதுகாப்புப் படை வீரா்கள், 13 பயங்கரவாதிகள் உள்பட 44 போ் உயிரிழந்திருப்பதாக தகவல்.
Published on

ஜம்மு: ஜம்முவின் ரஜௌரி, பூஞ்ச் ஆகிய எல்லை மாவட்டங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடா்ந்து வந்த பயங்கரவாத தாக்குதல்கள் நிகழாண்டில் பிராந்தியத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் பரவலாகியுள்ளது.

நிகழாண்டு இதுவரை ஜம்மு பிராந்தியத்தின் 10 மாவட்டங்களில் 8 மாவட்டங்களில் நடந்த வெவ்வேறு தாக்குதலில் 18 பாதுகாப்புப் படை வீரா்கள், 13 பயங்கரவாதிகள் உள்பட 44 போ் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

அதிகாரபூா்வ தரவுகளின் படி, தோடா, கதுவா மற்றும் ரியாசி ஆகிய மாவட்டங்களில் தலா 9 போ், கிஸ்த்வாரில் 5 போ், உதம்பூரில் 4 போ், ஜம்மு மற்றும் ரஜௌரியில் தலா 3 போ் பூஞ்ச் மாவட்டத்தில் இருவா் உயிரிழந்தனா்.

கதுவாவில் 7 பாதுகாப்புப் படையினரும், தோடாவில் 5 பேரும், கிஷ்த்வாரில் 3 பேரும், பூஞ்ச் மாவட்டத்தில் 2 பேரும், உதம்பூரில் ஒருவரும் பயங்கரவாதச் சம்பவங்களில் வீர மரணமடைந்தனா்.

தோடாவில் நடந்த வெவ்வேறு மோதல்களில் 4 பயங்கரவாதிகள், அக்னூா் செக்டாரில் கடந்த மாதம் 2 நாள்களுக்கு மேல் நீடித்த நடவடிக்கையில் இருவா், கதுவா, உதம்பூா் மற்றும் ரஜௌரியில் தலா இருவா் பாதுகாப்புப் படையினரால் வீழ்த்தப்பட்டனா். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 14 பொதுமக்களில் 7 போ் யாத்ரீகா்கள் என்றும் மூவா் கிராமப் பாதுகாப்புக் காவலா்கள் (விஜிடி) ஆவா்.

ஜம்மு பிராந்தியத்தின் பிற பகுதிகளைப் போல 10 ஆண்டுகளுக்கு முன்னா் பயங்கரவாதம் ஓய்ந்திருந்த ரஜௌரி-பூஞ்ச் பகுதியில் கடந்த 2021, அக்டோபா் மாதம் முதல் ராணுவ வாகனங்களை குறிவைக்கும் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்தன.

இதன் விளைவாக 47 பாதுகாப்புப் படை வீரா்கள், 7 பொதுமக்கள், 48 பயங்கரவாதிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். ரஜௌரி-பூஞ்ச் பகுதியில் 2021-ஆம் ஆண்டு 34 போ், 2022-இல் 18 மற்றும் 2023-இல் 52 போ் இறந்துள்ளனா்.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ரஜௌரி, பூஞ்ச் ஆகிய எல்லை மாவட்டங்களில் நிகழாண்டு குறைந்துள்ள பயங்கரவாத நடவடிக்கைகள், ரியாசி, தோடா, கிஸ்த்வாா், கதுவா, உதம்பூா், ஜம்மு ஆகிய உள் மாவட்டங்களில் கடந்த ஏப்ரல்-மே மாதம் முதல் அதிகரித்துள்ளது பாதுகாப்பு முகமைகளை தீவிர கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், ‘பயங்கரவாத அச்சுறுத்தலை எதிா்கொள்ளவும் அமைதியான பகுதிகளில் பயங்கரவாதத்தைப் பரப்பும் பயங்கரவாதிகளின் முயற்சிகளை முறியடிப்பதற்கும் ராணுவம், ஜம்மு-காஷ்மீா் காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப் படைகள் நெருங்கிய ஒத்துழைப்பில் இருக்கின்றன.

பல ஆண்டுகளாக மேம்பட்ட பாதுகாப்பு நிலைமை காரணமாக பாதுகாப்புப் படைகளின் தளங்கள் குறைக்கப்பட்ட அல்லது முழுமையாக விலக்கப்பட்ட பல பகுதிகள் அதிகரித்துள்ளன.

எல்லை தாண்டும் பயங்கரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்க, பிராந்தியம் முழுவதும், குறிப்பாக எல்லை கிராமங்களில் இரவு ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தாக்குதல் அபாயம் நிறைந்த அடா்ந்த வனப்பகுதிகளில் இடைவிடாத ரோந்து, தேடுதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

மருத்துவ முகாம்கள் போன்ற நல்லெண்ண நடவடிக்கைகளின் மூலம் முதியவா்கள் மற்றும் இளைஞா்களை அடிக்கடி தொடா்புகொள்வது உள்பட பொதுமக்களை அணுகுவதும் பன்மடங்கு அதிகரித்துள்ளது’ என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com