
மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை மேலும் இரண்டு முதியவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஜிா்பாம் நகருக்குத் தெற்கே 30 கி.மீ. தொலைவில் அடா்ந்த வனப்பகுதி மற்றும் மலைகளால் சூழப்பட்ட போரோபெக்ரா கிராமம் அமைந்துள்ளது. அங்குள்ள காவல் நிலையம் மற்றும் அதையொட்டி அமைந்த மத்திய ஆயுதக் காவல் படை (சிஆா்பிஎஃப்) முகாம் மீது அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினா். தொடா்ந்து அருகேயுள்ள சந்தைக்குள் நுழைந்த தீவிரவாதிகள், கடைகளுக்குத் தீ மூட்டியதுடன் பொதுமக்களின் வீடுகளையும் சூறையாடினா்.
மத்திய காவல் படையினா் மற்றும் மாநில காவல் துறையினா் பதில் தாக்குதல் நடத்தியதால் இருதரப்பினர் இடையே சுமாா் 45 நிமிஷங்களுக்கு கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் காயமடைந்தனர். வீரா் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கையின்போது, லைஷ்ராம் பலேன் மற்றும் மைபம் கேஷோ ஆகியோரின் உடல்கள் ஜகுரதோர் கரோங் பகுதியில் உள்ள இடிபாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டன.
நேற்று ஜகுரதோர் கரோங் பகுதியில் தீவிரவாதிகள் கடைகளுக்கு தீ வைத்து எரித்ததில் இரண்டு முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.
காவல் நிலைய வளாகத்தில் நிவாரணம் முகாம் செயல்பட்டு வந்த நிலையில், தாக்குதலைத் தொடர்ந்து அங்கு தங்கியிருந்த 5 பொதுமக்கள் காணவில்லை. அவர்களைத் தேடும் பணியை போலீஸார் தொடங்கியபோது இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது.
ஜிரிபாம் மாவட்ட நிர்வாகம், அப்பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்கத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.