
தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் நிகழாண்டு தீபாவளிக்குப் பிறகு காற்றின் தரம் 'மிகவும் மோசம்' பிரிவுக்குச் சென்றது. இதனால் காற்று மாசுத் தடுப்பு நடவடிக்கைகளை தில்லி அரசு மேற்கொண்டு வருகின்றது.
இருப்பினும் காற்றின் தரம் தொடர்ந்து 2-வது நாளாக இன்று 'கடுமை' பிரிவில் இருக்கிறது. இன்று காற்றின் தரக் குறியீடு 428 ஆக பதிவாகியுள்ளது.
தில்லியில் காற்று மாசு கலந்த புகைமூட்டம் காரணமாக இன்று 300-க்கு மேற்பட்ட விமானங்கள், 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு காற்று மாசு, புகைமூட்டமாக உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசினைக் குறைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
மேலும் காற்று மாசுக்கான கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் லாகூருக்கு அடுத்தபடியாக உலகளவில் காற்று மாசு மோசமான நகரமாக தில்லி இருக்கிறது.
தில்லியில் தற்போது இருக்கும் காற்று மாசு என்பது, 25 முதல் 30 சிகரெட்டுகளை புகைப்பதற்குச் சமம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் காற்றில் பி.எம். 2.5 நுண்துகளின் அளவு அதிகமாக இருந்தால் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தி, உடலில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் அதிகபட்சமாக புற்றுநோயைக்கூட உண்டாக்கும் என்றும் எச்சரிக்கின்றனர்.
தில்லி காற்று மாசு தொடர்பாக அவசர வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றம் வருகிற நவ. 18 ஆம் தேதி விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.