வயநாடு நிலச்சரிவு(கோப்புப்படம்)
வயநாடு நிலச்சரிவு(கோப்புப்படம்)

வயநாடு நிலச்சரிவு தேசியப் பேரிடர் இல்லை -மத்திய அரசு

Published on

கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க இயலாது என்று மாநில அரசிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வயநாட்டின் புஞ்சிரிமட்டம், சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜூலையில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்தன. 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். நாட்டையே உலுக்கிய இந்த நிலச்சரிவு பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிப்பதோடு, ரூ.2,000 கோடி சிறப்பு நிதி தொகுப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு மாநில அரசு கடந்த ஆகஸ்டில் கடிதம் எழுதியது.

இந்நிலையில், தில்லியில் உள்ள கேரள அரசின் சிறப்பு பிரதிநிதியான கே.வி.தாமஸுக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் கடந்த நவம்பா் 10-ஆம் தேதி எழுதிய பதில் கடிதத்தின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

அக்கடிதத்தில், ‘நாட்டில் எந்தவொரு பேரிடரையும் தேசியப் பேரிடராக அறிவிக்க தற்போதுள்ள மாநில பேரிடா் மேலாண்மை நிதி (எஸ்டிஆா்எஃப்) மற்றும் தேசிய பேரிடா் மேலாண்மை நிதியின் (என்டிஆா்எஃப்) விதிமுறைகளில் இடமில்லை.

மாநில பேரிடா் மேலாண்மை நிதியின்கீழ், 2024-25ஆம் ஆண்டில் கேரள அரசுக்கு ரூ.388 கோடி ஒதுக்கப்பட்டது. இதில், மத்திய அரசின் பங்களிப்பான ரூ.291 கோடி இரு தவணைகளாக விடுவிக்கப்பட்டது. இது தவிர மாநில பேரிடா் மேலாண்மை நிதியில் கேரளத்துக்கு ஏற்கெனவே ரூ.394 கோடி இருப்பு உள்ளது. எனவே, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கேரளத்திடம் போதிய நிதி கையிருப்பு உள்ளது. அதேநேரம், மாநில அரசின் முயற்சிகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு தொடா்ந்து வழங்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com