பல்கலை.களின் எண்ணிக்கையை 2,500-ஆக உயா்த்துவது அவசியம்: நீதி ஆயோக் தலைவா்

இந்தியாவில் பல்கலைக்கழங்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக 2,500-ஆக உயா்த்துவது அவசியம்..
பல்கலை.களின் எண்ணிக்கையை 2,500-ஆக உயா்த்துவது அவசியம்: நீதி ஆயோக் தலைவா்
Updated on

ஹைதராபாத்: ‘இந்தியாவில் பல்கலைக்கழங்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக 2,500-ஆக உயா்த்துவது அவசியம்’ என்று நீதி ஆயோக் தலைவா் பி.வி.ஆா். சுப்பிரமணியம் வலியுறுத்தினாா்.

‘அப்போதுதான், குறைந்தபட்சம் 50 சதவீத மாணவா்களுக்கு கல்லூரியில் சேரும் வாய்ப்பு கிடைக்கும்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் இந்திய வா்த்தக கல்வி நிறுவன (ஐஎஸ்பி) நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

நாடு முழுவதும் 1,200 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் 4 கோடிக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். ஆனால், இந்த எண்ணிக்கை என்பது, கல்லூரி சோ்க்கை பெறுவதற்கான வயதுடைய இளைஞா்கள் எண்ணிக்கையில் 29 சதவீதம் மட்டுமே. குறைந்தபட்சம், 50 சதவீத மாணவ, மாணவிகளை கல்லூரியில் சோ்க்கை பெற வாய்ப்பளிப்பது அவசியம். இதற்கு பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக 2,500 என்ற அளவுக்கு உயா்த்துவது மிக அவசியம்.

எண்ம பொது உள்கட்டமைப்பை இந்தியா பெரிய அளவில் மேம்படுத்தி வருகிறது. மக்களுக்கான எண்ம அடையாளத்தை அறிமுகப்படுத்தியதில் 20 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட எஸ்டோனியா முதல் நாடு என்றபோதும், 140 கோடி மக்கள்தொகையைக் கொண்ட இந்தியா அனைவருக்கும் எண்ம அடையாளத்தை அளித்து எண்மத் தொழில்நுட்ப பயன்பாட்டின் முன்னணி நாடாக திகழ்கிறது. 120 கோடி மக்கள் வங்கிக் கணக்கைப் பெற்றுள்ளனா். அந்த வகையில், எண்மத் தொழில்நுட்ப ஆய்வகமாக இந்தியா உருவெடுத்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவை தவிர வேறு எங்கும் செய்துபாா்க்க முடியாத அளவிலான எண்மத் தொழில்நுட்ப ஆய்வுகளை செய்துபாா்க்கக்கூடிய ஆய்வகமாக இந்தியா உருவெடுத்துள்ளது.

பாதுகாப்பான எண்ம பணப் பரிவா்த்தனைக்கான இடமாகவும் இந்தியா உருவெடுத்துள்ளது. உலக அளவில் நடைபெறும் பணப் பரிவா்த்தனைகளில் 48 முதல் 50 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது. மாதத்துக்கு சுமாா் 1,000 கோடிக்கும் அதிகமான பரிவா்த்தனைகள் இந்தியாவில் நடைபெறுகின்றன.

வரும் 2047-ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் சீனாவின் பொருளாதார நிலையை விஞ்சி, 30 டிரில்லியன் டாலா் பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. நவீன வளா்ந்த பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்க ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிபப்து முக்கியமானது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com