
தங்கத்தின் விலை அதன் உச்சபட்ச விலையிலிருந்து 9 சதவீதம் சரிந்துள்ளது. தங்கத்தின் இந்த தொடர் விலைச்சரிவை நிபுணர்களும் ஆதரிக்கின்றனர்.
அமெரிக்காவில் அதிகரித்துவரும் பணவீக்கம் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு சரிந்து வருவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
தங்கம் விலை கடந்த செப்டம்பர் மாதத்தில் கிடுகிடுவென உயரத் தொடங்கியது. அந்த மாதம் 24-ஆம் தேதி ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்தை கடந்தது. அக்டோபர் மாதம் 29ஆம் தேதி ரூ. 59 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தை எட்டியது.
தங்கம் விலை ரூ. 60 ஆயிரத்தைத் தொட்டுவிடுமோ என்ற அச்சம் நடுத்தர மக்கள் மத்தியில் நிலவியது. ஆனால், தற்போது அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், நவ. 2-ஆம் தேதியில் இருந்து விலை சற்று குறையத் தொடங்கியது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.55 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.6,995-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து கடந்த 6 நாள்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்று (நவ. 18) சற்று உயர்ந்துள்ளது.
இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின்படி, ரூ. 80 ஆயிரத்துக்கு மேல் விற்பனையான 10 கிராம் தங்கம் தற்போது ரூ. 74,657 -க்கு விற்பனையாகிறது.
விலை அதிகரிக்க காரணம் என்ன?
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மும்பையைச் சேர்ந்த கேடியா ஆலோசனை நிறுவனம் கூறியதாவது,
''இந்த ஆண்டில் தங்கத்தின் விலை 24% அதிகரித்துள்ளது. உக்ரைன், காஸா என மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வருவதால் சர்வதேச அளவில் நிலவும் பதற்றமான சூழல் அதனால் உருவான தேவை ஆகியவை விலை ஏற்றத்துக்கு காரணம்.
2021 ஜூன் மாதத்துக்குப் பிறகு கடந்த இரு மாதங்களில் மிகக் குறைவாக தங்கம் வர்த்தகமாகியுள்ளது. ஃபெடரல் வங்கி வட்டி விகிதம் அடுத்த மாதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. தங்கக் காசுகள் விற்பனை கடந்த வாரம் முழுக்க சரிந்துள்ளது. இது இந்த வாரத்தின் விற்பனையில் 4% குறைவாகும்'' எனக் குறிப்பிட்டது.
தங்கம் விலையில் மாற்றமிருக்காது
காமா ஜுவல்லரி மேலாண் இயக்குநர் கோலின் ஷா கூறுகையில்,
''தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சரிவானது, இந்தியர்களிடையே தங்கம் வாங்கும் ஆர்வத்தை அதிகரிக்கும். இது திருமண சீசன் தொடங்கும் காலகட்டம். திருமண நிகழ்வுகளில் தங்கம் வாங்குவது முக்கிய இடம்பெறும். அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிலையான பணவீக்கம் மற்றும் அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆகியவை தங்கம் விலை குறையக் காணமாகிறது. அடுத்த குறுகிய காலத்திற்கு தங்கத்தின் இந்த நிலையிலேயே இருக்கும். பதற்றமான சூழல் முற்றிலும் தணியாததால் தங்கத்தின் விலை மீண்டும் அதன் உச்சத்தை எட்டும். 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் ரிசர்வ் வங்கி மற்றும் ஃபெடரல் வங்கிகளின் வட்டி விகிதம் பொருத்தும் விலை மாறுபடும்'' எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.